என் மனைவியை அண்ணன் பிரித்தார்.. தம்பி அபகரித்தார்.. காங். பிரமுகரை கொன்றவர் பரபர வாக்குமூலம்
ஐஸ் அவுஸ் காங். பிரமுகர் கொலையில் குற்றவாளி கோர்ட்டில் சரணடைந்தார்.
சென்னை: "என் பொண்டாட்டியை என்கிட்ட இருந்து பிரிச்சிட்டதாலதான் கொலை பண்ணேன்" என்று சென்னையை நடுங்க வைத்த காங்கிரஸ் பிரமுகரை வெட்டி கொன்றவர் வாக்குமூலம் தந்துள்ளார்.
இளைஞர் காங்கிரஸ் மத்திய சென்னை செயலாளராக இருந்தவர் தாஜூதீன் அப்பாஸ். நேற்றுமுன்தினம் ஐஸ் அவுஸ் பகுதியில் இவரை 4 பைக்கில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி வீழ்த்தி தப்பித்தது. கொலை நடந்தது ராத்திரி 10.30 மணி என்பதால் பொதுமக்கள் இதை நேரில் பார்த்து பயத்தில் உறைந்தனர்.

சிசிடிவி கேமராக்கள்
பிறகு இதை பற்றி கேள்விப்பட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் எல்லாம் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியல் நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் விஷயம் சீரியஸானது. பாதுகாப்புக்கு போலீசார்கள் குவிக்கப்பட்டார்கள். எதற்காக அப்பாஸை கொன்றார்கள் என்று தெரியாத போலீசாரும் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை கொண்டு ஆராய்ந்து விசாரணையை ஆரம்பித்தார்கள்.

கோர்ட்டில் சரண்
ஆனால் அப்பாஸை வெட்டி கொலை செய்ததாக முக்கிய குற்றவாளி ஒருவர் நாகை நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முன்பு சரணடைந்து விட்டார். இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டபோதுதான் கொலைக்கான காரணம் என்னவென்று தெரிய வந்தது. வேறென்ன? கள்ளக்காதல்தான்!!

சிக்கன் பகோடா
போலீசாரிடம் ரவுடி இம்ரானுதீன் கூறியதாவது: நானும், அப்பாசும் நெருங்கிய நண்பர்கள். 2013-ல் ஐஸ் அவுஸ்-ல் ரோட்டோரம் சிக்கன் பக்கோடா கடையை நடத்தி வந்தேன். நாங்கள் ரெண்டு பேருமே அடிதடி உள்ளிட்ட விவகாரங்களில் ஈடுபட்டு வந்தோம். இதனால் என் மனைவிக்கும் எனக்கும் சண்டை வந்தது. அப்போது அப்பாசின் சகோதரர் பாஷா என்பவர் சமாதானப்படுத்தறேன் என்று கூறி என் மனைவியை அபகரித்துவிட்டார்.

நெருங்கவே முடியவில்லை
இதனால் பாஷாவை கொலை செய்ய முடிவு செய்தேன். அதற்காக 2014-ம் ஆண்டு ரம்ஜான் அன்று ஓடஓட விரட்டி கொலை செய்தேன். அண்ணனை நான் கொலை செய்துவிட்டதால் அப்பாஸ் என்னை பழி தீர்க்க பல வகைகளில் முயற்சி செய்தார். ஆனால் பாஷைவை கொன்ற பிறகு நான் பெரிய ரவுடி ஆகிவிட்டேன். அதனால் என்னை அப்பாஸால் நெருங்கவே முடியவில்லை. அதனால் என்னை பழிவாங்க குறுக்கு வழியில் யோசித்தான். அதன்படி என் மனைவிக்கு உதவி செய்வது மாதிரி பழக ஆரம்பித்தான்.

அபகரித்து விட்டார்
கொஞ்ச நாளில் இது கள்ளக்காதலாக போய்விட்டது. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. அண்ணன் என் மனைவியை என்னிடம் இருந்து பிரித்து மட்டும்தான் வைத்தார், ஆனால் தம்பி அப்பாஸோ, என் மனைவியையே மொத்தமாக அபகரித்துவிட்டார். இதுதான் எனக்கு ஆத்திரமாக வந்தது. அதனால்தான் அப்பாஸை பழிவாங்க முடிவு செய்தேன். அதனால்தான் சந்தர்ப்பம் பார்த்து நேற்று முன்தினம் அப்பாஸ் தனியாக வருவதை அறிந்து என் நண்பர்களையும் கூட்டி கொண்டு போய் கொலை செய்தேன்." என்றார்.

7 பேருக்கு வலை
இந்த வாக்குமூலத்தை அடுத்து நாகை சிறையில் இம்ரானுதீன் அடைக்கப்பட்டார். மேலும் கொலை செய்த மற்ற 7 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள். இந்த கொலையில் என்ன விசித்திரம் என்றால், அண்ணன் பாஷாவை கொலை செய்த அதே இடத்தில்தான் தம்பியும் கொலை செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications