ஹெல்த் இன்சூரன்ஸ் போட்டவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. சென்னை நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சென்னை: உடல் நலக்குறைவு ஏற்படும் போது, எதிர்பாராமல் ஏற்படும் செலவுகளை ஈடுகட்டவே பலர் மருத்துவ காப்பீடு செய்கிறார்கள். இன்றைய சூழலில் விபத்து மற்றும் திடீர் உடல் நலக்குறைவு என்று இல்லாமல் கர்ப்பிணிகள் பிரசவம் முதல் அறுவை சிகிச்சை வரை பல வசதிகளுடன் மருத்துவ காபீடுகள் வந்துவிட்டன. ஆனால் மருத்துவ காப்பீட்டில் இருந்து தொகையை வழங்க படாதபாடு படுகிறார்கள். அவர்களுக்காகவே சென்னை நுகர்வோர் நீதிமன்றம் சூப்பர் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இன்றைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால், பலர் தனியார் மருத்துவமனைகளுக்கே சிகிச்சைக்காக செல்கிறார்கள். அப்படி செல்பவர்கள் காப்பீடு செய்திருந்தால், பல நன்மைகள் அவர்களுக்கு கிடைக்கும். விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்தால் கட்டணம் இல்லாமல் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற முடியும். வெளிநோயாளியாக சிகிச்சை பெற்றாலும் காப்பீடு பெற முடியும். அதேபோல் நோய் கண்டறிதலுக்கு ஏற்படும் செலவுகள் மற்றும் அறுவை சிகிச்சைக்கான செலவுகளை காப்பீடு மூலம் செய்து கொள்ளலாம்.

தனிநபர்கள் என்று இல்லை குடும்பத்திற்கே காப்பீடு செய்து கொள்ளலாம். ஒவ்வொரு குடும்பத்தினரும் செய்து கொள்ள வேண்டிய முக்கியமான காப்பீடு திட்டம் ஆகும். இந்த காப்பீடு திட்டங்களை பொறுத்தவரை மருத்துவ பில்களை அசல்களை காப்பீடு நிறுவனங்கள் கேட்பது வழக்கம். ஆனால் சிலர் ஒரிஜினல் பில்கள் இல்லாமல் தவிப்பார்கள். அதன் காரணமாக காப்பீடு தொகையை வாங்க முடியாமல் படாதபாடுபடுவார்கள். இந்நிலையில் அவர்களுக்காகவே சென்னை நுகர்வோர் நீதிமன்றம் சூப்பர் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையை சேர்ந்த சுவபாய், சம்பாலால் ஆகியோர் சென்னை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கை ஒன்றை தாக்கல செய்திருந்தனர். அதில், 'கடந்த 2021 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக சேத்துபட்டில் உள்ள மேத்தா தனியார் மருத்துவமனையில் 5 நாட்கள் சிகிச்சைக்காக சேர்ந்தோம். சிகிச்சைக்கு 1 லட்சத்து 20 ஆயிரத்து 412 ரூபாயை செலுத்த வேண்டும் என மருத்துவ நிர்வாகம் கூறியது.
இதையடுத்து, ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் TAGIC AIG காப்பீட்டு நிறுவனத்தில் நாங்கள் செலுத்திய மருத்துவ காப்பீட்டு தொகையில் இருந்து பில்களை செலுத்த விண்ணப்பித்தோம். ஆனால், காப்பீட்டு நிறுவனம் விதிகளின்படி ஒரிஜினல் பில்களை இணைத்து விண்ணப்பித்தால் மட்டுமே பரிசீலனை செய்ய முடியும் என எங்களது கோரிக்கையை நிராகரித்தது. அதனை தொடரந்து காப்பீடு 2021ல் காலாவதியாகி விட்டதாக கூறி, எங்கள் கோரிக்கையை நிராகரித்தது.
கடந்த 2019 முதல் 15 லட்சம் ரூபாய்க்கு மருத்துவ காப்பீட்டுக்கான பிரிமீயத்தை தவறாமல் செலுத்தி வந்தோம். 2022 வரை அது செல்லுபடியாகும் நிலையில் நிறுவனம் பாலிசி காலாவதியாகி விட்டதாக தெரிவித்தது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. காப்பீட்டு நிறுவனம் விண்ணப்பத்தை நிராகரித்த காரணத்தால், 1 லட்சத்து 20 ஆயிரத்து 412 ரூபாயை கடனாக வாங்கி மருத்துவமனையில் நாங்கள் செலுத்தினோம். எனவே எங்களுக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு 50 ஆயிரம் இழப்பீடு மற்றும் மருத்துவ செலவுகளை ஏற்க காப்பீடு நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும்' என அந்த மனுவில் கூறியிருந்தனர்.
இதற்கு, 'காப்பீடு நிறுவனத்தின் தரப்பில், ஒரிஜினல் பில்கள் இணைக்கப்படவில்லை. அதனால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது' என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, புகாரை விசாரித்த நுகர்வோர் ஆணையத்தின் தலைவர் கோபிநாத், உறுப்பினர்கள் கவிதா கண்ணன், ராமமூர்த்தி அமர்வு, 'மருத்துவ காப்பீடு தொகையை பெற ஒரிஜினல் பில்களை கட்டாயமாக சமர்பிக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் காப்பீட்டு நிறுவனம் கேட்கக்கூடாது என்று உத்தரவிட்டனர். மேலும் நீதிமன்றம் மேலும், 1 லட்சத்து 20 ஆயிரத்து 412 ரூபாய்க்கான மருத்துவ செலவை 9 சதவிகித வட்டியுடன் 2022ம் ஆண்டிலிருந்து கணக்கிட்டு நிறுவனம் வழங்க வேண்டும். காப்பீட்டு நிறுவனத்தின் சேவை குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட மனுதாரர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடாகவும், 5 ஆயிரம் ரூபாய் வழக்கு செலவாகவும் இரண்டு மாதத்தில் வழங்க வேண்டும்' என்று தீர்ப்பளித்தது.












Click it and Unblock the Notifications