கலைஞர் மகளிர் உரிமைத் தொகை.. வங்கிக் கணக்கு இல்லாத பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு
சென்னை: மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக சென்னையில் நாளை முதல் வீடுகளுக்கே சென்று டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்றும் வங்கிக் கணக்கு இல்லாத பெண்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார்.
திமுக தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு மாதம் ரூ 1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் திமுக அரசு அமைந்த நிலையில் இந்த திட்டத்தை தொடங்கி வைப்பதாக 2 ஆண்டுகள் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி இந்த திட்டம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயனாளிகள் எப்படி தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வகுத்துள்ளது.
இந்த திட்டத்தில் பயன்பெற மகளிருக்கு ஆண்டு வருமானம் ரூ 2.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். சொந்த வீடு, நிலம் இருக்கக் கூடாது. கார், ஆட்டோ போன்ற வாகனங்கள் சொந்தமாக இருக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இதை பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டித்தன. ஆரம்பத்தில் எல்லாருக்கும் ரூ 1000 என சொல்லிவிட்டு தற்போது அதில் இத்தனை நிபந்தனைகளை வைப்பதா?
அப்படிப் பார்த்தால் இந்த திட்டத்தில் குறைந்த அளவிலான பெண்களே பயனடைவார்கள் என்ற விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில் பயனாளிகளை தேர்வு செய்யும் பொறுப்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.
அதில் விண்ணப்பதாரரின் பெயர், திருமண நிலை, தொலைபேசி எண், மின் இணைப்பு எண், ஆதார் எண், குடும்ப அட்டை, வாடகை வீடா அல்லது சொந்த வீடா உள்ளிட்ட 10 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் பயனடைய 18 வயதுக்கு மேல் உள்ளவராக இருத்தல் வேண்டும். இந்த நிலையில் வரும் 20-ம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பயனாளிகளுக்கு வீடுதோறும் ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கனையும் விண்ணப்பங்களையும் கொடுப்பார்கள். அந்த விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்து டோக்கனில் உள்ள தேதியில் நேரத்தில் ரேஷன் கடையில் ஒப்படைக்க வேண்டும். அவற்றை மாவட்ட ஆட்சியர்கள் குழு ஆய்வு செய்து பயனாளிகளை கண்டறியும். இந்த திட்டத்திற்கு கைவிரல் ரேகை அவசியம் என்று சொல்லப்பட்டுள்ளது.
இந்த மகளிர் உரிமை தொகை தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் சென்னையில் நாளை முதல் மகளிர் உரிமைத் தொகை தொடர்பான டோக்கனும் விண்ணப்பமும் வழங்கப்படும். கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட பணிகளில் 3400 ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள்.
விண்ணப்பம், டோக்கன் உள்ளிட்டவற்றை வீடு வீடாக சென்று ரேஷன் கடை ஊழியர்கள் வழங்குவார்கள். இரண்டு கட்டமாக மொத்தம் 1428 ரேஷன் கடைகள் மூலம் டோக்கன் வழங்கப்படும். நியாய விலை கடைகள் முன்பு டோக்கன் குறித்த விவரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகை வைக்கப்படும். அது போல் வங்கிக் கணக்கு இல்லாத பெண்களுக்கு கூட்டுறவு வங்கி மூலம் வங்கிக் கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். மகளிர் உதவித் தொகை தொடர்பாக பொதுமக்கள் எந்த குழப்பமும் அடைய வேண்டாம். பொய் தகவல்களையும் நம்ப வேண்டாம் என ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications