மொத்த சென்னைக்கும் மிகப்பெரிய நல்ல செய்தி.. தமிழக அரசுக்கு மாநகராட்சி அனுப்பிய கடிதம் தெரியுமா?
சென்னை: சென்னையில் சாலையில் திரியும் மாடுகளால் அன்றாடம் அச்சுறுத்தலை பொதுமக்கள் சந்தித்து வருவதால், குடியிருப்பு பகுதிகளில் மாடுகள் வளர்ப்பதை தடை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு, சென்னை மாநகராட்சி கடிதம் அனுப்பி உள்ளது.
சென்னையில் மனிதர்கள் நடமாடவே இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் சாலைகளில் ஈக்களை போல் பைக்குகளும், கார்களும் குவிந்து கிடக்கின்றன. சென்னையில் சாலையில் நடந்து சென்றாலே விபத்தில் சிக்கும் அளவிற்கு மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ளது.

இப்படியான சூழலில் சென்னையில் மாடுகளை கட்டிப்போட்டு வளர்க்க இடம் இல்லாதவர்கள், அவற்றை சாலையில் மேயவிட்டு வளர்க்கிறார்கள். சென்னை மாநகராட்சியின் பல்வேறு சாலைகளும், தெருக்களும் தான் மாடுகள் வளர்க்கும் இடமாக உள்ளது. சென்னையில் சாலைகளில் மாடுகளை சுற்றவிட்டால் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. எப்போதாவது ஒருமுறை மட்டும் பிடித்து செல்லும் அதிகாரிகள் அந்த நேரத்தில் ஐந்தாயிரம் அபராதம் விதித்து விட்டு மாடுகளை விடுவிக்கிறார்கள்.
சாலையில் எல்லா மாடுகளையும் ஏற்றி செல்லவும் முடியாது. சாலை முழுக்க மாடுகளால் நிறைந்து காணப்படுகிறது. இந்த மாடுகளால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. சாலையில் திரியும் மாடுகளால் அன்றாடம் சென்னை மக்கள் அச்சுறுத்தலை சந்தித்து வருகிறார்கள். இதுஒருபுறம் எனில் கடந்த சில மாதங்களில் மாடுகள் முட்டி பொதுமக்கள் பாதிக்கப்பட்ட சம்பவமும் நடந்து வருகிறது. சாலையில் மாடுகளை திரிய விடும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தாலும் இதை கட்டுப்படுத்துவது என்பது மாநகராட்சிக்கு பெரும் சிரமமாக உள்ளது.
அண்மையில் திருவொற்றியூரில் சாலையில் திரிந்த எருமை மாடு ஒன்று அந்த வழியாக சென்ற பெண் ஒருவரை முட்டித் தாக்கியது. இதில், அந்த பெண் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாட்டின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடரும் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க சென்னை மாநகராட்சி புதிய நடவடிக்கை ஒன்றை எடுக்க திட்டமிட்டுள்ளது. இதன்படி, சென்னையில் குடியிருப்பு பகுதிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் சாலைகள், மார்க்கெட் பகுதிகளில் மாடுகள் வளர்ப்பதை தடை செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து சென்னை மாநகராட்சி கடிதம் அனுப்பி இருக்கிறது.
முன்னதாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாடுகளை வளர்க்க தடை விதிக்கப்பட்ட தடை விதிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு பின்னர் தடை உத்தரவு திரும்ப பெறப்பட்டிருந்தது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சியில் சுற்றித் திரியும் மாடுகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் ஒழுங்குபடுத்துவது சவாலான காரியமாக இருப்பதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
தற்போதைய நிலையில் சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு மண்டலத்துக்கும் 15 மாடு பிடிக்கும் வாகனங்கள் நாள்தோறும் கால்நடை சோதனை நடத்த ஒதுக்கப்பட்டிருக்கிறது. சாலையில் திரியும் மாடுகளை பிடித்த பின்னர் அதன் உரிமையாளர்களிடமிருந்து ரூ.5 ஆயிரம் அபராதம் பெறப்பட்டு, உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய பின்னர் மீண்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் நிகழ்வுகள் நடக்கிறது.
இதுபோன்ற கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்குப் பிறகும், சென்னை மாநகராட்சியில் தெரு மாடுகளின் தொல்லை அதிகமாகவே உள்ளது. தெருவில் திரியும் மாடுகள் குறித்த பிரச்சினையை திறம்பட சமாளிக்க, கால்நடை உரிமையாளர்களுக்கு உரிமம் வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். போதுமான இடம், தண்ணீர், வடிகால் வசதி, முறையான பராமரிப்பு ஆகியவற்றுடன் கால்நடைகளை வளர்க்கும் உரிமையாளர் உரிமம் பெறலாம். இந்த வசதிகள் இல்லாத உரிமையாளர்களுக்கு மாடு வளர்க்க உரிமம் மறுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க குடியிருப்பு மற்றும் மார்க்கெட் பகுதிகளில் மாடுகளை வளர்ப்பதை தடை செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சி சார்பில் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.












Click it and Unblock the Notifications