சென்னையில் மாஸ் திட்டம்.. சாலையோரங்களில் ஏசி ஓய்வறை.. டெலிவரி தொழிலாளர்களுக்காக மாநகராட்சி ஏற்பாடு!
சென்னை: உணவு டெலிவரி மற்றும் இ - காமர்ஸ் நிறுவனங்களில் டெலிவரி செய்யும் தொழிலாளர்களுக்காக சென்னை நகரின் முக்கிய சாலைகளில் ஏசி வசதியுடன் கூடிய ஓய்வு அறைகள் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் நாம் நினைத்தவுடன் சாப்பாடு கிடைக்கிறது. ஆர்டர் செய்த சில நிமிடங்களில் நாம் இருக்கும் இடத்திற்கு உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஸ்விக்கி, ஜோமேட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் 24 மணிநேர உணவு டெலிவரி செய்யும் வசதியின் மூலம் பயனர்களுக்கு தங்களது சேவைகளை வழங்கி வருகின்றனர்.

அதே வேளையில், இந்த நிறுவனங்களின் ஊழியர்கள் சரியாக நடத்தப்படவில்லை என்ற கருத்துகளும் எழுந்து வருகின்றன. போக்குவரத்து நெரிசல், வெயில், மழை என்று பல்வேறு சூழ்நிலையிலும் அவர்கள் வேலை செய்கிறார்கள். இதற்கு தீர்வாக பொது இடங்களில் அவர்களுக்கான ஓய்வு வசதிகளுடன் ஓய்வு அறைகளை அமைக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. டெலிவரி செய்பவர்கள் பணி நேரங்களுக்கு இடையே எடுக்கும் சிறிய ஓய்வின் மூலம் புத்துணர்ச்சியாக உணரலாம்.
உணவு டெலிவரி பயணங்களுக்கு இடையில் சற்று இளைப்பாறிவிட்டு செல்லும் வகையில் சிறிய அளவிலான அறை அமைக்கப்பட்டு, கழிவறை, குடிநீர், ஸ்மார்ட்ஃபோன் சார்ஜிங் செய்யும் வசதி, வேகமான இணையதள வசதி, 24 மணி நேர உதவி சேவை, முதலுதவி சேவை உள்ளிட்ட வசதிகள் இந்த அறையில் வழங்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், உணவு மற்றும் இ- காமர்ஸ் நிறுவனங்களில் டெலிவரி செய்யும் தொழிலாளர்களுக்காக சென்னை நகரின் முக்கிய சாலைகளில் ஏசி ஓய்வு அறைகள் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதன்படி சோதனை முறையில் சென்னை அண்ணா நகர், நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏ.சி வசதியுடன் ஓய்வு அறைகள் அமைக்கப்படவுள்ளன. இதனால் பெண் தொழிலாளர்கள் அதிகம் பயனடைவார்கள் எனக் கூறப்படுகிறது.
துபாயில் இருப்பது போன்று சாலையோரங்களில் குளிரூட்டப்பட்ட ஓய்வு அறைகள் அமைக்கப்படவுள்ளன. தற்போது உணவு மற்றும் இ- காமர்ஸ் நிறுவனங்களில் டெலிவரி செய்யும் தொழிலாளர்கள், அடிப்படை பாதுகாப்பு முன்னெச்சரிக்கை எதுவுமின்றி, சென்னையின் சில முக்கியமான சாலைகளில் அதிகளவில் கூடுகிறார்கள். மழைக் காலங்கள் மற்றும் கோடை காலங்களில் இவர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.

வெயிலுக்கு கொஞ்சம் இளைப்பாற கூட இடம் கிடைப்பதில்லை. அதிலும், தற்போது உணவு டெலிவரி மற்றும் இ- காமர்ஸ் டெலிவரி தொழிலாளர்களில் தற்போது பெண்களும் அதிகளவில் உள்ளனர். அவர்கள் கழிவறைகளைப் பயன்படுத்துவதற்கே பெரும்பாடாக உள்ளது.
குறிப்பாக உணவு மற்றும் இ- காமர்ஸ் நிறுவனங்களில் டெலிவரி செய்யும் தொழிலாளர்களில் சுமார் 10 சதவீதம் பேர் பெண்களாவர். ஆகவே பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், அவர்களுக்கு அத்தியாவசிய சேவை வழங்கும் விதமாகவும், ஏசி ஓய்வு அறைகள் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் சென்னையில் டெலிவரி சேவைகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள். இந்த திட்டத்தை மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications