சென்னையில் 150 புதிய ஜிலுஜிலு பூங்காக்கள் - உங்க ஏரியாவுக்கும் ‘பார்க்’ வேண்டுமா?
சென்னை: கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னை மாநகராட்சி 150 பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களை அமைக்க உள்ளது.
தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்த ஆரம்பித்துவிட்டது. பள்ளிக் குழந்தைகளுக்குக் கோடை விடுமுறை விரைவில் தொடங்க உள்ளது. ஆகவே அதிகப்படியான குழந்தைகள் இந்தக் கோடை விடுமுறையைக் குதூகலமாகக் கொண்டாட ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இந்த மொட்டை வெயில் காலத்திலும் விளையாட்டு மைதானங்கள் ஆட்டம், ஓட்டம் எனச் சிறுவர்களால் நிரம்பி வழியப் போகிறது.
இதற்காக முன்கூட்டியே திட்டமிட்டுள்ள பெருநகர சென்னை மாநகராட்சி, ஏறக்குறைய 150 பூங்காக்களில் கூடுதலாக பெஞ்சுகள் மற்றும் குழந்தைகள் விளையாட்டு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அனைத்து மண்டல துணை ஆணையர்கள் மற்றும் மண்டல அலுவலர்களுக்கு இதற்கான உத்தரவும் விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆந்திர மாநிலம் ராஜமகேந்திரவரத்தில் இருந்து மரக்கன்றுகளைக் கொண்டுவந்து நடவும் திட்டமிட்டுள்ளனர்.
மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, நகரின் பல்வேறு பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 150 பூங்காக்களில் கூடுதல் பெஞ்சுகள் மற்றும் குழந்தைகள் விளையாட்டு உபகரணங்களை விரைவில் நிறுவுவதை உறுதி செய்யுமாறு அனைத்து மண்டல துணை ஆணையர்கள் மற்றும் மண்டல அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் ராஜமகேந்திரவரத்திலிருந்து 10 அடிக்கு மேல் உயரமுள்ள 100 நாட்டு மரங்களைக் கொள்முதல் செய்து, சுமார் 150 பூங்காக்களில் அவற்றை நட மண்டல அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்காக ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள அதிகாரிகள் 10 பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களின் பட்டியலை இந்த வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மாநகராட்சி சார்பில் கூறப்பட்டுள்ளது.

"பொதுமக்கள் இயற்கையான காற்றை அனுபவிக்கும்படி பூங்காக்களை அதிகாரிகள் மேம்படுத்த உள்ளனர். கோடைக் காலத்தில், பூங்காக்களைத் தேடி பொதுமக்கள் அதிகமாக வருவார்கள். ஆகவே மெரினா கடற்கரையின் பசுமை சூழலை மேம்படுத்தி வருகிறோம்.
மேலும் பூங்காக்களில் உள்ள சுற்றுச்சுவர்களில் வண்ண ஓவியங்களைத் தீட்டுவது, நல்ல நடைபாதைகளை அமைப்பது, இருக்கைகளைத் தரமாகவும், கலைத் தன்மையுடன் வடிவமைப்பது எனப் பல வேலைகளைச் செய்ய உள்ளோம்" என்று ஒரு அதிகாரி தெரிவிக்கிறார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு, "சென்னையில் காலியாக கிடக்கும் திறந்தவெளி பகுதிகளில் புதியதாக இடங்களைத் தேர்வு செய்துள்ளோம்.
அங்கே புதிய பூங்காக்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். மேலும் சில திறந்தவெளி பூங்காக்களில் உடற்பயிற்சி செய்வதற்கான கருவிகளை தற்போது நிறுவி வருகிறோம்" என்கிறார்.
இதில் சிறப்பு என்னவென்றால் இப்படி புதிதாக உருவாக்கப்பட்ட பூங்காக்கள் அனைத்தும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

புதிய பூங்காக்கள் குறைந்த அளவில் கான்கிரீட்டை பயன்படுத்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதிகமாக, இயற்கையான பசுமை சூழலைக் கொண்டு நிறுவப்பட உள்ளன.
"இதனால் இந்தப் பூங்காக்கள் மழைக்காலத்தில் பூத்துக் குலுங்கும் பூஞ்சோலைகளாகச் செயல்படும்" என்றார் கே.என்.நேரு.
இது பற்றிக் கூறிய முன்னாள் கவுன்சிலர் பி.வி. தமிழ்செல்வன், "எங்கள் பகுதியில் பூங்காக்களை உருவாக்க வேண்டி திறந்தவெளி இடம் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாகவே எங்கள் பகுதி மக்கள் விளையாட்டு மைதானங்களை, பூங்காக்களை மேம்படுத்த வேண்டும் என்று மாநகராட்சிக்குக் கோரிக்கை விடுத்திருந்தனர்.

மின்ட் பகுதியிலும், பெரம்பூர் மேம்பாலம் அருகே உள்ள முரசொலி மாறன் பூங்காவிலும் பொழுதுபோக்கான தளங்களை மாநகராட்சி உருவாக்கி வருகிறது" என்கிறார்.
சென்னையில் உள்ள 200 வார்டுகளில், சிலவற்றில் மட்டும் பொழுதுபோக்கிற்கான இடங்கள் போதுமான அளவில் இல்லை. குறிப்பாகக் குழந்தைகள் விளையாடுவதற்கு இடமில்லை என அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஆகவே விளையாட்டு மைதானங்களுக்கு விளையாடுவதற்காக வரும் குழந்தைகளின் பாதுகாப்பைச் சென்னை மாநகராட்சி உறுதி செய்ய வேண்டும் எனப் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கவுன்சிலர் டி.வி.செம்மொழி, இவரது வார்டில் அதிக பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களை உருவாக்கப்பட உள்ளது என்கிறார். மேலும் தேவைப்படும் இடங்களில் பூப்பந்து மைதானங்களை உருவாக்க உள்ளதாகவும் சொல்கிறார்.

சென்னை மாநகராட்சியின் 2022-2023 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழாக சுமார் 141 பூங்காக்களும் 51 விளையாட்டு மைதானங்களும் சுமார் 36.46 கோடி மற்றும் 16.33 கோடி மதிப்பீட்டில் உருவாக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்கிறார்.
சென்னையை நவீனமாக மாற்ற பல்வேறு திட்டங்களைச் சென்னை மாநகராட்சி நடைமுறைப்படுத்தி வருகிறது. அதில், சிங்கார சென்னை 2.0, நமக்கு நமே திட்டம் ஆகியவற்றின் கீழ் 2023-2024 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அதிக பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொழுதுபோக்கு வசதிகளை மேம்படுத்தக் குறைந்தபட்சம் சுமார் 30 கோடி செலவிடப்படும் என்று பட்ஜெட்டிலும் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் ஒட்டுமொத்தமாக 200 வார்டுகள் உள்ளன. அதில் ஒவ்வொரு வார்டுகளிலும் பொழுதுபோக்கிற்கான இடங்களின் தேவை குறித்த திட்ட மதிப்பீடுகளைத் தயாரிப்பதற்கு முன், அது குறித்த விவரங்களைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்கும்படி மாநகராட்சி அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
அதேபோல் விளையாட்டு மைதானங்கள் அல்லது பூங்காக்களில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்றால் பொதுமக்கள் அது குறித்து 1913 என்ற ஹெல்ப்லைனில் புகார் தெரிவிக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications