கால்பந்து மைதானங்களை தனியார் மயமாக்க சென்னை மாநகராட்சி முடிவு.. ஒரு மணி நேரத்திற்கு 120 கட்டணம்
சென்னை: சென்னையில் 9 கால்பந்து மைதானங்களை தனியார் மயமாக்க சென்னை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அ.தி.மு.க., வி.சி.கே., கம்யூனிஸ்டு கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே, ஒன்பது இடங்களில் கால்பந்து மைதானங்களை தனியார் மயமாக்க தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் சென்னை மாநகராட்சிக்கு 93 லட்சம் ஆண்டுக்கு வருவாய் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
சென்னை மாநகராட்சி பூங்காங்கள் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு, பயிற்சி என்ற பெயரில் பள்ளி மாணவ மாணவிகளிடம் பண வசூல் செய்யப்படுவதாக புகார்கள் உள்ளது. இதேபோல் சென்னையில் மாநகராட்சிக்கு சொந்தமான டென்னிஸ் திடல், ஷெட்டில் மற்றும் பேட்மிட்டன் கோட், ஸ்கேட்டிங் மைதானம் , டேபிள் டென்னிஸ் மைதானங்கள் போன்றவற்றை தனியாருக்கு அளிக்கப்பட்டிருப்பதாகவும் இதன் காரணமாக ஏழை மாணவ, மாணவிகள் பயிற்சி பெற முடியாத நிலை இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில், தற்போது,கால்பந்து விளையாட்டு திடல்களையும் தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்து சென்னை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றி இருப்பதை எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்துள்ளன.

முன்னதாக சென்னை மாநகராட்சி கடந்த மாதம் நடந்த மாமன்ற கூட்டத்தில் ஆண்டுக்கு 6 சதவீதம் சொத்து வரியை உயர்த்த தீர்மானம் நிறைவேற்றியது. அடுத்ததாக தற்போது கால்பந்து விளையாட்டு மைதானத்துக்கு மாணவ, மாணவிகளிடம் கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்றத்தின் இந்த மாதத்துக்கான (அக்டோபர் 24) கூட்டம் இன்று ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு துணை மேயர் மு.மகேஷ் குமார், கூடுதல் ஆணையர் ஆர்.லலிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான செயற்கை புல் கால்பந்து விளையாட்டு திடல்களை தனியாருக்கு வாடகைக்கு விடுவது உள்பட 79 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இன்றைய சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் அனைவருக்கும் இன்றைய கூட்டத்தில் கையடக்க கணினி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் மொத்தம் 738 பூங்காக்கள், 173 உடற்பயிற்சி கூடங்கள், 220 விளையாட்டு திடல்கள், 204 குழந்தைகள் விளையாட்டு திடல்கள் இருக்கின்றன. இதில் 9 செயற்கை புல் கால்பந்து விளையாட்டு திடல்களை தனியாருக்கு வாடகைக்கு விட முடிவு செய்துள்ளது. அதாவது வார்டு 37ல் வியாசர்பாடி கால்பந்து திடல், வார்டு 58ல் நேவல் மருத்துவமனை சாலை, வார்டு 67ல் திரு விக நகர் கால்பந்து மைதானம், வார்டு 77இல் உள்ள கே.பி.பார்க் கால்பந்து மைதானம் உள்ளிட்ட 9 இடங்களை தனியாருக்கு விட சென்னை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
ஒரு மணி நேரத்திற்கு ஒரு நபருக்கு 120 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயம் செய்யும் வகையில் விரைவில் ஆன்லைன் டெண்டர் விடப்பட உள்ளது. இதில் 40 ரூபாய் மாநகராட்சிக்கு கிடைக்கும். அதாவது மைதானத்தை பராமரிக்கும் தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு ஆண்டுக்கு 2.3 கோடி கிடைக்கும். இதில் 93 லட்சம் சென்னை மாநகராட்சிக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும், ஒப்பந்ததாரர் சென்னை மாநகராட்சியின் ஆண்டு வருமானத்தை 5% அதிகரிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கால்பந்து மைதானங்களை தனியாருக்கு விடும் சென்னை மாநகராட்சியின் இந்த முடிவுக்கு அ.தி.மு.க., வி.சி.கே., கம்யூனிஸ்டுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் எதிர்ப்பை மீறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனிடையே கால்பந்து மைதானத்தை தனியாருக்கு அளிப்பதற்கு எதிராக பல கால்பந்து வீரர்கள் ரிப்பன் மாளிகை முன்பு இன்று போராட்டம் நடத்தினர். இதனிடையே சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் இதுபற்றி கூறும் போது, சொத்துக்களை பராமரிக்க வருவாய் தேவை என்றும், அது முற்றிலும் இலவசமாக இருக்க முடியாது என்றும் தெரிவித்தார். SDAT இல் பதிவு செய்த விளையாட்டு வீரர்களுக்கு கட்டணங்களில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் கூறினார்.
இதனிடையே செனாய் நகர் அம்மா அரங்கம், தி.நகர் சர்.பிட்டி தியாகராய அரங்கங்களை தனியாருக்கு குத்தகைக்கு விட சென்னை மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. போதிய வருவாய் ஈட்டாத காரணத்தால் 5 ஆண்டுகளுக்கு தனியாருக்கு குத்தகைக்கு விட முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம். இந்த மண்டபங்களில் வாடகையை மறு நிர்ணயம் செய்து தனியாருக்கு குத்தகைக்கு விடவும் இன்றைய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications