செந்தில் பாலாஜி வழக்கில் ‘ட்விஸ்ட்’.. புது பெட்டிஷன்.. அமலாக்கத்துறைக்கு பறந்த உத்தரவு!
சென்னை: அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனு மீது மீண்டும் வாதங்களை முன்வைக்க அனுமதி கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில், அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை மாவட்ட 3வது கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட புகாரில், சட்ட விரோதமாகப் பணப் பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். தொடர்ந்து, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி.

சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்தபோது செந்தில் பாலாஜி தரப்பில், செந்தில் பாலாஜியிடம் 67 கோடியே 40 லட்சம் ரூபாய் இருந்ததாக கூறுகிறார்கள். ஆனால் அது நிரூபிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
அமலாக்கத்துறை வழக்கில் செந்தில் பாலாஜி தண்டிக்கப்படும் நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டால் என்ன ஆகும்? என செந்தில் பாலாஜி தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், செந்தில் பாலாஜிக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை எனவும் வாதிடப்பட்டது.
அமலாக்கத்துறை தரப்பில், கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், 2015, 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளில் செந்தில் பாலாஜியின் வங்கி கணக்கில் அதிகளவில் பணம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்டவைகளில் இருந்து முப்பது கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் வாதிடப்பட்டது.
பணம் பெற்றுக் கொண்டு தகுதியில்லாதவர்களுக்கு வேலை வழங்கியது குற்றச் செயல் எனவும், வழக்கு விசாரணையை முடக்கும் நோக்கில் செந்தில் பாலாஜி சார்பில் தொடர்ச்சியாக மனுத்தாக்கல் செய்து வருவதாகவும், செந்தில் பாலாஜிக்கு எதிராக போதிய ஆதாரங்கள் உள்ளதால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிபதி அல்லி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவில் மீண்டும் வாதங்களை முன்வைக்க அனுமதிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, நேற்று புதிய மனுவை தாக்கல் செய்தார்.
அவரது மனுவில், 'இந்த வழக்கு தொடர்பான சில ஆவணங்களை கோரி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த ஆவணங்கள் இன்னும் கிடைக்கவில்லை. எனவே, அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனு மீது மீண்டும் வாதங்களை முன்வைக்க அனுமதிக்க வேண்டும். அவ்வாறு வாதிட அனுமதிக்கவில்லை என்றால் தனக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படும்' என்று கோரியுள்ளார்.
இந்த மனு சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வர இருந்தது. நீதிபதி அல்லி விடுப்பு காரணமாக, சென்னை மாவட்ட 3-வது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டு நீதிபதி ஆனந்த் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, செந்தில் பாலாஜியின் இந்த மனு தொடர்பாக அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணை ஏப்ரல் 4ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications