‛சரக்கு’ பட சர்ச்சை.. வழக்கறிஞரின் கழுத்து பட்டையால் வந்த சிக்கல்! மன்சூருக்கு கோர்ட் அதிரடி ஆர்டர்
சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் நடிப்பில் ‛சரக்கு' திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் போஸ்டர் சர்ச்சையை கிளப்பிய நிலையில் சென்னை நீதிமன்றம் மன்சூர் அலிகானுக்கு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ் சினிமாவில் பைட்டராகவும், நடன கலைஞராகவும் இருந்தவர் மன்சூர் அலிகான். அதன்பிறகு நடிகராக அறிமுகம் ஆனார். குறிப்பாக 90ஸ் காலத்தில் இவர் நடித்த வில்லன் கதாபாத்திரங்கள் இன்று வரை பேசும் வகையில் உள்ளது.

இதற்கிடையே தான் அவர் திரைப்பட வாய்ப்பு இன்றி இருந்தார். சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‛லியோ' திரைப்படத்தில் மன்சூர் அலிகானுக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வாய்ப்பு வழங்கினார். இதில் அவரது நடிப்பு பாராட்டு பெற்றது.
இதன்மூலம் அவர் மீண்டும் திரைத்துறையில் வலம் வர தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் தான் நடிகை த்ரிஷா குறித்து அவர் கூறிய கருத்து பெரும் சர்ச்சையானது. இதையடுத்து மன்சூர் அலிகானுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் போலீசில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து மன்சூர் அலிகான் மன்னிப்பு கோரிய நிலையில் இந்த பிரச்சனை என்பது முடிவுக்கு வந்துள்ளது.
இதற்கிடையே இயக்குனர் ஜெயக்குமார் இயக்கத்தில் நடிகர் மன்சூர் அலிகான் சரக்கு என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தில் நடிகை வலீனா, யோகி பாபு, பாக்யராஜ், கேஎஸ் ரவிக்குமார், ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டவர்கள் நடித்தனர். இந்த திரைப்படம் 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29 ம்தேதி தியேட்டர்களில் வெளியானது.
முன்னதாக மன்சூர் அலிகானின் ‛சரக்கு' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த போஸ்டரில் மது பாட்டில் இடம்பெற்றிருந்தது. அந்த பாட்டிலின் கழுத்து பகுதியில் வழக்கறிஞர்கள் அணியும் கழுத்துப்பட்டை போன்ற அமைப்பு இருந்தது. இதற்கு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சென்னை நகர உரிமையியல் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று நீதிபதி சுந்தரராஜன் விசாரித்தார். விசாரணை முடிவில் ‛சரக்கு' பட போஸ்டரில் இடம்பெற்றிருக்கும் வழக்கறிஞர்கள் அணியும் கழுத்துப்பட்டையை நீக்கம் செய்ய வேண்டும் மன்சூர் அலிகானுக்கு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications