மிக்ஜாம்.. ரேசன் கார்டு இல்லாமல் விண்ணப்பித்தவர்களுக்கு ரூ.6,000.. உங்க அக்கவுண்ட் செக் பண்ணுங்க
சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டு வெள்ள நிவாரணம் கேட்டு ரேசன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்த சென்னைவாசிகளுக்கு ரூ. 6,000 நிவாரணம் இன்று முதல் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில் தகுதியானவர்களுக்கு வங்கிக்கணக்கில் ரூ.6000 பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் மாதம் 3, 4ஆம் தேதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.

மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6,000 வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த 37 லட்சம் குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்க அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி குடும்ப அட்டைதாரர்களுக்கு புயல் வெள்ள நிவாரணத் தொகை நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்பட்டது.
மேலும் குடும்ப அட்டை இல்லாதவர்கள், வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு வெள்ள நிவாரணம் வழங்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டது. ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து, தனித்தனியாக விண்ணப்பித்து தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விவரங்கள் தெரிவித்து நிவாரணம் பெற்றுக்கொள்ள அரசு அறிவுறுத்தியது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ரேஷன் அட்டை இல்லாத 5.5 லட்சம் பேர் புயல் வெள்ள நிவாரணம் கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். அவர்கள் பற்றி கணக்கெடுக்கப்பட்டது.
இந்நிலையில் ரேஷன் அட்டை இல்லாமல் மிக்ஜாம் புயல் நிவாரணம் கேட்டு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு இன்று முதல் ரூ.6000 வங்கிகணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. தகுதிவாய்ந்தவர்களுக்கு ரூ.6000 வங்கிகணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications