ஈசிஆர் ரோட்டில் யார் பாருங்க.. சென்னையில் இருட்டில் வட்டமிட்ட கண்.. அதென்ன "ஐ.டி.ஊழியர்கள்" மட்டும்?
சென்னை: ஈசிஆர், ராஜிவ்காந்தி சாலைகளில் ஐடி ஊழியர்களை குறிவைத்து உயர் ரக கஞ்சா விற்பனை செய்து வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சமீபகாலமாகவே, தமிழகத்தில் கஞ்சா விற்பனை தலைதூக்கியது.. ஆனால், "ஆபரேஷன் கஞ்சா 2.0" தமிழக அரசு மேற்கொண்ட அதிரடிகளால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. கஞ்சா ரவுடிகள் பலர் கைதானார்கள்.

இதில் சென்னையில் கூடுதல் கவனம் தற்போது செலுத்தப்பட்டு வருகிறது. சென்னையை பொறுத்தவரை, கடந்த 11ம் தேதி முதல் 17ம் தேதி வரை, அதாவது ஒரு வாரம் நடத்திய சோதனையில், வெளிமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்ததாக 34 வழக்குகள் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டுள்ளது..
இந்த ஒரே வாரத்தில் கஞ்சா வியாபாரிகள் 58 பேரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.. அவர்களிடமிருந்து 52 கிலோ கஞ்சா, 2 கிராம் மெத்தம்பெட்டமைன், 1,838 போதை மாத்திரைகள், 9 செல்போன்கள், 3 பைக்குகள், ஒரு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
அதனால்தான், சென்னையில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், போலீசாருக்கு உத்தரவிட்டிருக்கிறார்.. அந்தவகையில், சென்னை மாநகரம் முழுவதுமே போலீசார் கஞ்சாவுக்கு எதிரான வேட்டையை கையிலெடுத்து வருகிறார்கள். தற்போதுகூட, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.. சூளைமேடு பகுதியில் ஐ.டி ஊழியர்களை குறிவைத்து உயர் ரக கஞ்சா விற்பதாக அரும்பாக்கம் உதவி கமிஷனர் ரமேசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
முரண் தகவல்: எனவே, சூளைமேடு குற்றப்பிரிவு போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான 2 பேர் அந்த பகுதியில் சுற்றி வந்தனர்.. அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்கள்.. இதனால், அவர்களிடமிருந்து பையை வாங்கி சோதனையிட்டனர். அதற்குள் 50 கிராம் பாக்கெட்டுகளில் 3 கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், கானத்தூர் பகுதியை சேர்ந்த இர்பான் கவுஸ் (42), பெரம்பூர் பேரக்ஸ் சாலையை சேர்ந்த ஜூனைத் அகமத் (41) என்ற இந்த 2 கடத்தல்காரர்களையும் போலீசார் கைது செய்தனர்.. இவர்களிடம் கிடுக்கிடி விசாரணையும் நடந்தது..
பகீர் வாக்குமூலம்: ஐடி ஊழியர்களுக்கு சப்ளை செய்வதற்காகவே, அசாம் மாநிலத்தில் இருந்து 1 கிலோ உயர்ரக கஞ்சாவை ரூ.18 ஆயிரத்திற்கு ரயில் மூலம் கடத்தி வந்தது தெரியவந்தது.. ஐடி ஊழியர்களுக்கு வெறும் 50 கிராம் கஞ்சா, ரூ.2,500க்கு விற்பனை செய்வார்களாம்.. கிழக்கு கடற்கரை சாலை, ராஜிவ்காந்தி சாலைகளில் நிறைய ஐடி ஊழியர்கள் தங்கியிருப்பதால், இவர்களை குறிவைத்தே கஞ்சா சப்ளை செய்யப்படுகிறது.. இரவு நேரங்களில், இந்த ஊழியர்களிடம் விற்று வருகிறார்கள்..












Click it and Unblock the Notifications