“வேணும்னே பழி வாங்குறாங்களானு தெரியல.. 1 மணி நேரமா காத்திருக்கோம்”.. சென்னை ரயில் பயணிகள் புலம்பல்!
சென்னை: சென்னை எழும்பூரில் நடந்து வரும் பணிகள் காரணமாக புறநகர் ரயில்கள் குறைவாகவும், தாமதமாகவும் இயக்கப்படுவதால் பணிக்குச் செல்லும் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். "வேண்டுமென்றே பழி வாங்குகிறார்களா எனத் தெரியவில்லை. 1 மணிநேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது" என பயணிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 10, 11 ஆகிய நடைமேடைகளில் சீரமைப்பு மற்றும் நடைமேம்பாலப் பணிகள் நடைபெறுகின்றன. இதனால், கடற்கரை- செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை 44 மின்சார ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், புறநகர் மின்சார ரயில்கள், எழும்பூர் ரயில் நிலையத்தின் 5, 6-வது நடைமேடை வழியாக இயக்கப்பட்டு வருகின்றன.

மேலும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நடைமேடை 5, 6 ஆகியவற்றிக்கு வரவேண்டிய மின்சார ரயில்கள் சேத்துப்பட்டில் நின்று விடுகின்றன. இதனால் குறிப்பிட்ட இடைவெளியில் ரயில் சேவை இல்லாமல் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
நடைமேடைகள் மாற்றப்பட்டதால், தண்டவாளங்களைக் கடப்பது மற்றும் சிக்னல் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. பிப்ரவரி 20 ஆம் தேதி சிக்னலைக் கடந்து செல்ல 7 முதல் 10 நிமிடங்கள் ஆனது. இதனால் 2 மார்க்கத்திலும் மின்சார ரயில்கள் தாமதமாகின. இதன் காரணமாக ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் பயணிகள் 45 நிமிடங்கள் வரை காத்திருந்தனர்.
4வது நாளான இன்றும் பயணிகள் கடும் அவதியடைந்தனர். ரயில் தாமதம் காரணமாக, மின்சார ரயில்களில் எழும்பூர் நிலையம் வந்து, விரைவு ரயிலைப் பிடிக்க வந்தவர்களில் பலர் ரயிலைத் தவறவிட்டனர். ஏற்கெனவே குறிப்பிட்டிருந்த அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கப்படாததால், பயணிகள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
எழும்பூரில் நடந்து வரும் பணிகள் காரணமாக புறநகர் ரயில்கள் குறைவாகவும், தாமதமாகவும் இயக்கப்படுவதால் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. பணிக்குச் செல்லும் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். "வேணும்னே பழி வாங்குறாங்களா என்னனு தெரியல.. 1 மணிநேரம் வரை காத்திருக்க வேண்டியதா இருக்கு .. கோடம்பாக்கம் வரை கட் சர்வீஸ் விடணும்." என ரயில் பயணி ஒருவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
புறநகர் மின்சார ரயில் வேகமாக செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும், 15 நிமிடத்திற்கு ஒரு மின்சார ரயில் என்பது தற்போது 40 நிமிடம் கடந்தும் வரவில்லை என பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். பணிக்குச் செல்ல வேண்டிய நேரத்தில் செல்ல முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக பயணிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே, சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் முக்கிய மறுசீரமைப்பு பணிகள் 45 நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளன. இதற்கு பொது மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பும், ஆதரவும் வழங்க வேண்டும்.
இந்த தற்காலிக மாற்றங்கள் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதை புரிந்துகொள்கிறோம். எனினும், லட்சக்கணக்கான பயணிகளுக்கும் வருங்கால தலைமுறையினருக்கும் நீண்ட கால நன்மைகளை வழங்க இவை அவசியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications