"இந்த ஃபைலை முதலில் எடுங்க முதல்வரய்யா".. சென்னை வெள்ளம்.. முதல்வருக்கு சேரன் பரபர கோரிக்கை
சென்னை: சென்னையில் மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு இயக்குனர் சேரன் முக்கியமான கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழ்நாடு முழுக்க கடந்த 24 மணி நேரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று மாலை தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை பெய்தது. அதிகாலைக்கு பின் கொஞ்சம் விட்ட மழை மீண்டும் தீவிரமாக பெய்து வருகிறது.
இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.

மாலை
நேற்று மாலையில் இருந்து இன்று காலை 8 மணி வரை சென்னையில் மொத்தம் 207 மிமீ மழை பெய்துள்ளது. கடந்த 5 வருடமாக சென்னையில் 200 மிமீ அளவில் மழை பெய்யவில்லை. கடைசியாக சென்னையில் 2015ல் வெள்ளம் ஏற்பட்ட போது 200மிமீக்கும் அதிகமாக மழை பெய்தது. அப்போது செம்பரம்பாக்கம் முன்னறிவிப்பின்றி திறக்கப்பட்டது.

2015 வெள்ளம்
இதனால் சாலைகளில் திடீரென வெள்ளம் ஏற்பட்டு பெரிய பாதிப்பு ஏற்பட்டது. அதன்பின் இந்த முறைதான் 200 மிமீக்கும் அதிகமாக மழை பெய்துள்ளது. இந்த முறையும் செம்பரம்பாக்கம் திறக்கப்பட்டாலும் அபாயக்கட்டத்தை நெருங்கும் வரை காத்திருக்காமல் முன்கூட்டியே ஏரியை திறந்து, நீரை வெளியேற்றி உள்ளனர்.

புகார்
இந்த நிலையில் சென்னை சாலைகளில் தேங்கி இருக்கும் மழை நீர் மற்றும் வெள்ளம் குறித்து இயக்குனர் சேரன் புகார் வைத்துள்ளார். முதல்வர் ஸ்டாலினை டேக் செய்து அவர் செய்துள்ள ட்வீட்டில், மழை பாதிப்பு வந்தால் தண்ணீர் தேங்காமல் வெளியேற திட்டம் தீட்டி சென்னைக்கு மட்டும் மத்திய அரசிடம் 900 கோடிக்கு மேல் வாங்கினார்களே முந்தைய ஆட்சியில்... இதுதான் அந்த திட்டத்தில் செயல்படுத்திய நகரமா.. இந்த ஃபைல முதல்ல எடுங்க முதல்வர் அய்யா. என்று தனியும் இந்த நிலை.. என்று கேள்வி எழுப்பி சேரன் ட்வீட் செய்துள்ளார்.

கோப்புகள்
அதாவது சென்னையில் வெள்ளம் ஏற்படாமல் இருக்க முந்தைய ஆட்சியில் வாங்கப்பட்ட நிதி குறித்தும், அது செலவு செய்யப்பட்ட விதம் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் விசாரிக்க வேண்டும் என்று சேரன் கோரிக்கை வைத்துள்ளார். சென்னையில் தி நகர் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள புகைப்படங்களை பகிர்ந்து சேரன் இந்த கோரிக்கையை வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications