சென்னையில் ஷாக்! "ஜெஜே" திருமாவளவனிடம் போதை கும்பல் தகராறு! தடுக்கபோன போலீஸ் ஓடஓட விரட்டியடிப்பு
சென்னை: சென்னையில் திருமாவளவனிடம் போதை கும்பல் தகராறு செய்து பணம் பறிக்க முயன்றது. இதையடுத்து தகராறை தடுக்க சென்ற போலீஸ்காரரை கஞ்சா போதையில் இருந்த கும்பல் கத்தியை காட்டி மிரட்டி ஓடஓட விரட்டியது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் கஞ்சா பதுக்கல், விற்பனையை தடுக்க போலீசார் தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். ஆனால் போலீஸ் கண்ணில் மண்ணை தூவிவிட்டு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பிற மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு ஆங்காங்கே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இதற்கு தலைநகர் சென்னையும் விதிவிலக்கல்ல. சென்னையிலும் சில இடங்களில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் சென்னையில் தகராறை தடுக்க சென்ற போலீஸ்காரரை கஞ்சா போதை கும்பல் விரட்டிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதன் விபரம் வருமாறு:
சென்னை காட்டுப்பாக்கம் ஜெஜெ நகரை சேர்ந்தவர் திருமாவளவன். நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள கோவிலில் திருவிழா நடந்தது. இதையடுத்து திருமாவளவன் கோவில் திருவிழா பார்த்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவரை 3 பேர் கும்பல் திடீரென வழிமறித்துள்ளது. அவர்கள் கஞ்சா போதையில் இருந்த நிலையில் திருமாளவனிடம் பணம் கேட்டு மிரட்டினர்.

இந்த வேளையில் தன்னிடம் பணம் இல்லை என திருமாவளவன் கூறியுள்ளார். ஆனால் போதையில் இருந்த கும்பல் அவரை ஆபாசமாக திட்டி தாக்கியதோடு, கத்தியால் கீறியும் உள்ளது. இதனால் உயிருக்கு பயந்த திருமாவளவன் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீஸ் கான்ஸ்டபிள் சரவணன் சம்பவ இடத்துக்கு சென்றார்.
மேலும் கஞ்சா போதையில் திருமாவளவனிடம் பணம் கேட்டு தாக்கிய கும்பலை அவர் பிடிக்க முயன்றார். அப்போது அந்த கும்பல் அவரை கத்தியை காட்டி மிரட்டியது. மேலும் போதை கும்பலை சேர்ந்த ஒருவர் தனது உடலில் கத்தியால் கீறிக்கொண்டு சரவணனையும் மிரட்டியதோடு விரட்ட துவங்கியது. இதனால் பயந்துபோன போலீஸ்காரர் சரவணன் ஓடினார். இதையடுத்து கூடுதலாக போலீசார் வந்த நிலையில் போதை கும்பலை தட்டித்தூக்கினர்.

3 பேரிடமும் சென்னை பூந்தமல்லி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே தான் போதை கும்பல் போலீஸ்காரர் சரவணனை அச்சுறுத்தி விரட்டியது அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகள் தற்போது இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications