சென்னையில் தங்கம் விலை பெரும் சரிவு.. நகை பிரியர்களுக்கு தீபாவளிக்கு மறுநாளே மகிழ்ச்சியான செய்தி
சென்னை: சென்னையில் நவம்பர் ஒன்றாம் தேதியான இன்று ஆபரண தங்கம் விலை ரூ.560 குறைந்து ரூ.59,080க்கு விற்பனையாகிறது. ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.7,385க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக ஏறி வந்த தங்கம் விலை தீபாவளிக்கு மறுநாளான இன்றுதான் சற்று குறைந்துள்ளது.
தங்கம் விலை கடந்த மார்ச் மாதத்தில் ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை தொட்டது. அதன் பின்னர் அப்படியே நீடித்து வந்த நிலையில், மெல்ல மெல்ல அதிகரித்து மே மாதத்தில் ரூ.55 ஆயிரத்தை தொட்டது. கடந்த ஜூலை மாதம் மத்திய அரசின் பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால் விலை மளமளவென சரிந்து, ஒரு பவுன் ரூ.51 ஆயிரத்துக்கும் கீழ் வந்தது.

மேலும் விலை குறையும் என எதிர்பார்த்தவர்களுக்கு நினைத்து பார்க்க முடியாத அதிர்ச்சி காத்திருந்தது. அடுத்த சில மாதங்களில் தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து செப்டம்பர் மாதம் ரூ.56 ஆயிரத்தை தொட்டது. அதன் பின்னரும் ஏற்ற, இறக்கத்துடன் நீடித்தது. அதாவது ரூ.57 ஆயிரம் தொடும் நிலைக்கு வருவதும், பின்னர் குறைவதுமாக இருந்தது.
இதனிடையே இஸ்ரேல் ஈரான் நாடுகளில் போர் அபாயம், கச்சா எண்ணெய் விலை சரிவு, அமெரிக்க அதிபர் தேர்தல் போன்ற காரணங்களால் தங்கம் விலையில் அதிரடியான மாற்றம் ஏற்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் 16-ந்தேதி ஒரு பவுன் ரூ.57 ஆயிரத்தை கடந்து வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது. அதற்கு பிறகும் விலை உயர்ந்து கொண்டே இருந்தது. கடந்த அக்டோபர் 20-ந்தேதி ஒரு பவுன் ரூ.58 ஆயிரத்தையும் தாண்டியது. கடந்த அக்டாபர் 28ம் தேதி ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 315-க்கும், ஒரு பவுன் ரூ.58 ஆயிரத்து 520-க் கும் விற்பனை ஆனது.
அக்டோபர் 30ம் தேதி நிலவரப்படி, கிராமுக்கு ரூ.60-ம், பவுனுக்கு ரூ.480-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 375-க்கும், ஒரு பவுன் ரூ.59 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்தது. இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி கிராமுக்கு ரூ.15-ம், பவுனுக்கு ரூ.120-ம் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 455-க்கும், ஒரு பவுன் ரூ.59 ஆயிரத்து 640-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் தங்கம் விலை ரூ.60 ஆயிரத்தை தாண்டும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக சரிந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் விலை ரூ.560 குறைந்து ரூ.59,080க்கு விற்பனையாகிறது. ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.7,385க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை: சென்னையில் நேற்று வெள்ளி விலை நேற்று முன்தினதை ஒப்பிடும் போது எந்தமாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் ரூ.109-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று வெள்ளி விலை கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் ரூ.106-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications