தமிழகத்தையே உலுக்கிய சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் மரணம்.. தந்தையின் மனு தள்ளுபடி!
சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் மரணம் அடைந்தது தொடர்பான வழக்கை முடித்து வைத்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதி்ர்த்து ராம்குமாரி்ன் தந்தை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு, சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிறையில் மின்சார வயரை கடித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம், சென்னை காவல் ஆணையரிடம் அறிக்கை கோரியது. ஆணையர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் ராம்குமார் தற்கொலை செய்து கொண்டார் என முடிவுக்கு வந்த ஆணையம், இந்த வழக்கை கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் முடித்து வைத்தது.
இந்த உத்தரவை எதிர்த்து ராம்குமாரின் தந்தை பரமசிவம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், எந்த விசாரணையும் நடத்தாமல், சென்னை மாநகர காவல் ஆணையரின் அறிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே தேசிய மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, ராம்குமார் மரணம் குறித்து மீண்டும் விசாரணை நடத்த தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்" எனக் கோரி இருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தேசிய மனித உரிமை ஆணையம் தரப்பில், ஆணையத்தின் புலன் விசாரணை பிரிவின் அறிக்கை மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையரின் அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் ராம்குமார் தற்கொலை செய்தது உறுதியானதால் வழக்கு முடித்துவைக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
தமிழக காவல்துறை தரப்பில், இதே விவகாரத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் 2024-ல் ரத்து செய்ததாக தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், காவல்துறை, மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவு ஆகியவற்றின் அறிக்கைகளின் அடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவு சரிதான் என்றும், அதில் தலையிட எந்த காரணமும் இல்லை என்றும் கூறி, ராம்குமாரின் தந்தை பரமசிவம் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications