பாலத்தின் அடியில் பைப் வெடிகுண்டு.. அத்வானியைக் கொல்ல ஸ்கெட்ச்! தென்காசி ஹனிபாவுக்கு 5 ஆண்டுகள் சிறை
மதுரை: 2011ஆம் ஆண்டு ரத யாத்திரை மேற்கொண்ட பாஜக மூத்த தலைவர் அத்வானியை குண்டு வைத்து கொள்ள முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட தென்காசி முகமது ஹனிபாவை விடுதலை செய்த திண்டுக்கல் நீதிமன்றத்தின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி இந்தியா முழுவதும் ரதயாத்திரை மேற்கொண்டார். அந்த யாத்திரை ஒரு பகுதியாக தமிழகத்தின் பல பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்தார். அந்த யாத்திரை மதுரை மாவட்டம் திருமங்கலம் வழியாகச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், அத்வானி வருகைக்கு முன்னதாக மதுரை அருகே ஆலம்பட்டி பாலம் கீழே பைப் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தது. போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து வெடிகுண்டுகளை அகற்றினர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எல்.கே.அத்வானி
இது தொடர்பாக திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், விசாரணையை மதுரை சிறப்பு விசாரணை பிரிவு டி.எஸ்.பி. கார்த்திகேயன் முன்னெடுத்தார். விசாரணையின் போது, தென்காசியை சேர்ந்த முகமது ஹனிபா குண்டு வைத்த குற்றத்தில் தொடர்புடையவர் என தெரியவந்தது. அவருக்கு எதிராக நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்தது. இதனையடுத்து 2013 ஜூலை 8ஆம் தேதி, டி.எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியில் முகமது ஹனிபாவை கைது செய்யச் சென்றனர்.
வெடிகுண்டு சதி
அப்போது, ஹனிபா கத்தியால் தாக்கி டி.எஸ்.பி.யை கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, போலீசாரின் கடமையில் இடையூறு செய்தல், வெடிபொருட்கள் சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த நேரத்தில் ஹனிபா வசமிருந்த இரண்டு கத்திகள், மின்னணு டெட்டனேட்டர்கள், ஜெல் பைகள் மற்றும் முக்கிய இந்து தலைவர்களின் பெயர்கள் அடங்கிய ஹிட் லிஸ்ட் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
திண்டுக்கல் நீதிமன்றம்
இதுதொடர்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. ஆனால், 2018 டிசம்பர் 20 அன்று ஹனிபாவை அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் நீதிமன்றம் விடுவித்தது. இதற்கு எதிராக தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு, வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் பி. வேல்முருகன் மற்றும் எல். விக்டோரியா கவுரி அமர்வில் வழக்கு விசாரணை நடந்த போது, அரசு தரப்பில் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
உயர் நீதிமன்ற மதுரை கிளை
விசாரணை முடிவில், அத்வானியை கொல்ல முயன்றது மிகக் கடுமையான குற்றம். கீழமை நீதிமன்றம் அளித்த விடுதலை உத்தரவு தவறானது. இதுபோன்ற வழக்குகளில் நீதிமன்றம் கடுமையான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், திண்டுக்கல் நீதிமன்றம் வழங்கிய விடுதலை உத்தரவை ரத்து செய்டு, அக்டோபர் 28ஆம் தேதியான இன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.
5 ஆண்டு சிறை
இதையடுத்து இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் போலீசார் முஹம்மது ஹனிபாவை போலீசார் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தினர். ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் குற்றவாளியான முகமது ஹனிபாவுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதை அடுத்து அவர் பலத்த பாதுகாப்புடன் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.


Click it and Unblock the Notifications
