சிக்கலில் ரவி மோகன்.. ரூ.5.95 கோடி சொத்து ஆவணங்களை தாக்கல் செய்ய ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
சென்னை: 5 கோடியே 95 லட்சம் ரூபாய்க்கான சொத்து உத்தரவாதத்தை தாக்கல் செய்ய நடிகர் ரவி மோகனுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் பாலசந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தங்களது நிறுவனத்தின் சார்பில் இரண்டு படங்களில் நடிப்பதற்காக நடிகர் ரவி மோகனுடன் கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், முதல் படத்திற்கு ஊதியமாக பதினைந்து கோடி ரூபாய் ஊதியமாக பேசப்பட்டு ஆறு கோடி ரூபாய் முன்பணமாக கொடுக்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

ஒப்பந்தப்படி தங்களது நிறுவனத்தின் படத்தில் நடிக்காமல் மற்ற நிறுவன படங்களில் நடித்த போது முன்பணத்தை திருப்பி கேட்டதாகவும் அப்போது ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொள்வதாகவும் முன்பணத்தை திருப்பி அளிப்பதாக ரவி மோகன் கூறியதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், பணத்தை திருப்பிக் கொடுக்காத நிலையில் தனது சொந்த படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளதாகவும், அதன் மூலம் ப்ரோ கோட் என்ற படத்தை தயாரிக்க உள்ளதாக ரவி மோகன் வெளியிட்ட அறிவிப்பை கேட்டு தாங்கள் அதிர்ச்சி அடைந்ததாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி அப்தூல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்களது நிறுவனம் அளித்த முன்பணத்தை ரவி மோகன் தனது சொந்த படத் தயாரிப்புக்கோ அல்லது சொந்த செலவுகளுக்கோ பயன்படுத்த வாய்ப்புள்ளதால் ப்ரோ கோட் படத்தை தயாரிக்க தடை விதிக்க வேண்டும் எனவும், வேறு நிறுவனங்களின் தயாரிப்பிலும் நடிக்க ரவி மோகனுக்கு தடை விதிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். மேலும், ஆறு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
ரவி மோகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆறு கோடி ரூபாய் பெற்றுக்கொண்டது உண்மை தான் எனவும் ஆனால் கால்ஷீட் கொடுத்தும் பணிகளை தொடங்காததால் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு ஈடாக கூடுதலாக பத்து கோடி ரூபாயை பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் வழங்க வேண்டுமென வாதிட்டார்.
அதைத்தொடர்ந்து, பட தயாரிப்பு நிறுவனத்திடம் ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் ரவி மோகன் மனு தாக்கல் செய்தார். ஒப்பந்தப்படி குறித்த காலத்தில் படப்பிடிப்பை துவங்காததால் இழப்பு ஏற்பட்டுள்ளதாக நடிகர் ரவி மோகன் மனுவில் தெரிவித்துள்ளார். 80 நாட்கள் கால்ஷீட் கொடுத்தும் படப்பிடிப்பை துவங்கவில்லை என ரவி மோகன் மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.
நடிகர் ரவி மோகன் தாக்கல் செய்த வழக்கிற்கு பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பு நிறுவனம் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை இன்றைய தேதிக்கு தள்ளிவைத்திருந்தது சென்னை உயர்நீதிமன்றம்.
இந்நிலையில், இந்த மனுக்கள் நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இன்று மீண்டும், விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கின் மூலம் எதிர்மறையான விளம்பரம் தான் ஏற்படும். அதற்கு பதிலாக பணத்தை திரும்ப அளித்துவிடலாமே? என நீதிபதி யோசனை தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த ரவி மோகன் தரப்பு வழக்கறிஞர், வழக்கில் தங்கள் தரப்பு நியாயத்தை முன்வைக்க விரும்புவதாக கூறினார். மேலும் அவர், அடுத்த படத்தில் நடிக்கும்போது பணத்தை திரும்ப அளிப்பதாக கூறியதை தயாரிப்பு நிறுவனம் ஏற்கவில்லை என்றும் கொடுத்த கால்ஷீட்டை பயன்படுத்தவில்லை என்றும் கூறினார்.
தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தனது மனைவி உடனான பிரச்னையின் போது, வாடகை வீட்டில் வசித்து வருவதாக அறிக்கை வெளியிட்ட நடிகர் ரவி மோகன், தற்போது சொந்த பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளதாகவும், தங்கள் நிறுவனம் அளித்த முன் பணத்தை கொண்டு ரவிமோகன் தனது சொந்த பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளதாகவும் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து, இரு தரப்புக்கும் இடையேயான இந்த பிரச்சனையை பேசி தீர்த்துக்கொள்ள மத்தியஸ்தரை நியமிப்பதாக தெரிவித்த நீதிபதி, 9 கோடி ரூபாய் இழப்பீடு கோரியும், வேறு படங்களை வெளியிடவும் பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு தடை விதிக்கக்கோரி ரவி மோகன் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், 5 கோடியே 95 லட்சம் ரூபாய்க்கான சொத்து உத்தரவாதத்தை தாக்கல் செய்ய நடிகர் ரவி மோகனுக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த உத்தரவை நிறைவேற்றியது தொடர்பாக நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications