அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: தமிழகத்தில் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை குறித்து ஆறு வாரங்களில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்கள், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதுசம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது.
ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பாக கடந்த 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம் அரசாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை அமல்படுத்தக் கோரி, மருத்துவர்கள் சங்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இந்த மனுவை பரிசீலிக்கக் கோரி அரசு மருத்துவர் ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசுத்தரப்பில், குழு அளித்த பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கிய போது 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் அதனை செயல்படுத்த முடியவில்லை என கூறினார்.
இதனையடுத்து, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள அரசு மருத்துவர்களின் கோரிக்கை மனுவை ஆறு வாரங்களில் பரிசீலிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.












Click it and Unblock the Notifications