எவ்வளவோ மாறிடுச்சு.. இன்னும் எதுக்கு? அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்த ஐகோர்ட்!
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக தலைமை தொடர்பான புதிய முடிவுகள் எடுக்க தடை கேட்டும், பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரியும் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க மறுத்து, வழக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து சண்முகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரால் தனிதனியாக கையெழுத்திடப்பட்டு, இறுதி செய்யப்பட்ட 23 தீர்மானங்களை பொதுகுழுவில் முன்வைத்து, அவற்றில் எந்த முடிவையும் எடுக்கலாம். மற்ற விவகாரங்களை ஆலோசிக்கலாமே தவிர முடிவெடுக்கக் கூடாது என உத்தரவிட்டனர்.
ஆனால், நீதிமன்றத்தில் தெரிவித்த 23 தீர்மானங்களை தவிர, நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை நியமிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் அது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாக கருதி இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரை தண்டிக்க வேண்டும் எனக் கோரி, சண்முகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார்.
மேலும், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டதே செல்லாது என்பதால், அவர் அறிவித்த அடுத்த பொதுக்குழு கூட்டம் குறித்த அறிவிப்பு செல்லாது. எனவே ஜூலை 11-ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் ன கோரி கூடுதல் மனுவையும் தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, 23-ம் தேதி பொதுக்குழு கூட்டத்தில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 23 வரைவு தீர்மானங்களை நிராகரித்து விட்டு தமிழ்மகன் உசேனை நிரந்தர அவைத்தலைவராக நியமித்து, அடுத்த பொதுக்குழுவை ஜூலை கூட்டியது நீதிமன்ற உத்தரவை மீறிய செயல்" என வாதிடப்பட்டது.
அதன்பிறகு, அதிமுக பொதுக்குழு தொடர்பான பல்வேறு வழக்குகள் ஐகோர்ட்டில் முடித்து வைக்கப்பட்டன. இந்நிலையில், பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜூன் 23 பொதுக்குழு கூட்டத்திற்குப் பிறகு ஜூலை 11ஆம் தேதி புதிய பொதுக்குழு கூட்டப்பட்டு, பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டதால் முதல் பொதுக்குழு கூட்டத்திற்கு எதிரான வழக்கை நிலுவையில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை என ஐகோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications