லைசென்ஸ் கேட்ட டிடிஎப் வாசன்.. சென்னை உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு.. மனு அதிரடி தள்ளுபடி
சென்னை: ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக பல வழக்குகளில் சிக்கிய யூடியூபர் டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமம் கடந்த 2023ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது 2 ஆண்டுகள் கடந்த நிலையில் டிடிஎப் வாசன் ஓட்டுநர் உரிமம் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு அதிரடியாக தள்ளுபடி செய்யப்பட்டது.
கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் டிடிஎப் வாசன். இவர் இருசக்கர வாகனங்களில் பயணித்து அதனை யூடியூப்பில் பதிவேற்றி வந்தார். மேலும் சில நேரங்களில் பைக்கில் ஸ்டண்ட், வேகமாக செல்வது உள்ளிட்ட சாகசங்களை செய்தார்.

இதுதொடர்பான வீடியோக்கள் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து டிடிஎப் வாசன் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. போலீஸ் நிலையத்தில் ஆஜராகி அவர் அபராதம் செலுத்தியிருந்தார்.
கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் 17 ம்தேதி டிடிஎப் வாசன் காஞ்சிபுரம் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றார்.அப்போது அவரது பைக் விபத்தில் சிக்கியது. அதில் அவர் காயமடைந்தார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியானது. அப்போது அதிகப்படியான வேகம் மற்றும் சாகசம் செய்ய முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து டிடிஎப் வாசனை போலீசார் கைது செய்தனர். மேலும் தொடர்ச்சியான சாலை விதிமீறல் காரணமாக காஞ்சிபுரம் ஆர்டிஓ சார்பில் அவரது லைசென்ஸ் 10 ஆண்டுகள் ரத்து செய்து உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இதனால் லைசென்ஸ் இன்றி டிடிஎப் வாசன் உள்ளார்.
இந்நிலையில் தான் லைசென்ஸ் ரத்தாகி ஒன்றரை ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில் டிடிஎப் வாசன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் ரத்தான லைசென்ஸை திரும்ப தர வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்தது.
மேலும் மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி மாலா முக்கிய உத்தரவு ஒன்றையும் பிறப்பித்தார். டிடிஎப் வாசனின் கோரிக்கையை ஏற்க மறுத்த அவர் 6 மாதங்கள் கடந்து விட்டால் லைசென்ஸ் கோரி நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் என்றில்லை. உரிய அதிகாரிகளை அணுகலாம் எனக்கூறினார். இதனால் லைசென்ஸ் கிடைக்கும் என்று எதிர்பார்த்த டிடிஎப் வாசனுக்கு நேற்று ஏமாற்றமே மிஞ்சியது.












Click it and Unblock the Notifications