"பொறுமையை சோதிக்க வேண்டாம்.." ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி கோரிய வழக்கு.. சென்னை ஐகோர்ட் காட்டம்
சென்னை: ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதியளிக்கும் விவகாரத்தில் சென்னை ஐகோர்ட் சில காட்டமான கருத்துகளை தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் தங்கள் பொறுமையை சோதிக்க வேண்டாம் கூறிய சென்னை உயர் நீதிமன்றம், அனுமதி மறுக்கும் போலீசார் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
வரும் அக். 6ம் தேதி விஜயதசமியை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மாநிலம் முழுக்க 58 இடங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதி கோரி ஆஎஸ்எஸ் நிர்வாகிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

வாதம்: இந்த வழக்கு நேற்று திங்கள்கிழமை விசாரணைக்கு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பில் ஆரஜான வழக்கறிஞர் முகிலன், "மொத்தம் 58 இடங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலக்கிற்கு அனுமதி கேட்டிருந்த நிலையில், அதில் 42 இடங்களில் அனுமதி தரப்பட்டுள்ளது. அதேநேரம் 16 இடங்களில் மட்டுமே ஒரே மாவட்டத்தில் பல இடங்களில் ஊர்வலத்துக்கு அனுமதி கோரப்பட்டதால் பாதுகாப்பு பிரச்சினைகளுக்காக அங்கு மட்டும் அனுமதி தரப்படவில்லை" என்று வாதிட்டார்.
ஆர்எஸ்எஸ் தரப்பு: அப்போது ஆர்எஸ்எஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், "அற்ப காரணங்களை சொல்லி ஊர்வலத்திற்கு தமிழ்நாடு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். அனுமதி தரப்பட்ட இடங்களில் கூட நேரக்கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆர்எஸ்எஸ் தவிர்த்து மற்ற அமைப்புகளுக்கும் அனுமதி தரும் போது போலீஸ் எந்தவொரு கட்டுப்பாடுகளையும் விதிப்பது இல்லை. சட்டவிரோத அமைப்புகளுக்குக் கூட அனுமதி வழங்கப்படும் நிலையில், ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு மட்டும் சில அழுத்தம் காரணமாக அனுமதி தரப்படுவதில்லை.
இதில் தமிழ்நாடு அரசும், போலீசாரும் கண்ணாமூச்சி ஆடுகிறார்கள் என்றே தோன்றுகிறது. நமது நாட்டில் மற்ற மாநிலங்களில் தாலுகா வாரியாக ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் நீதிமன்ற படியேற வேண்டி உள்ளது. ஒரே மாவட்டத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பாதுகாப்பு வழங்க முடியாது என சொல்வதை ஏற்க முடியாது. விண்ணப்பித்த எல்லா இடங்களிலும் ஊர்வலத்திற்கு அனுமதி தர வேண்டும். மற்ற கட்டுப்பாடுகளை தளர்த்தவும் காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்" என்றனர்.
அதிருப்தி: இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என போலீஸாருக்கு எச்சரிக்கை விடுத்தார். நீதிபதி மேலும் கூறுகையில், "ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி தருவது குறித்து உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் ஏற்கெனவே விதிமுறைகளை வகுத்துள்ளது. அப்படி இருக்கும் போது அற்ப காரணங்களை சொல்லி அனுமதி வழங்க மறுப்பது ஏன்? இதுபோன்ற காரணங்களை சொல்லி அனுமதி மறுக்கும் போலீசார் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஏன் எடுக்கக்கூடாது?
ஒரு மாவட்டத்தில் பல இடங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதிக்க முடியாது என்று பாதுகாப்பு காரணங்களை போலீஸ் சொல்கிறது. அப்படி என்றால் திமுக பவள விழா நிகழ்வுகளுக்கு மட்டும் பாதுகாப்பு வழங்கியது எப்படி?" என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
உத்தரவு: மேலும், ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட 16 இடங்களில் அனுமதி வழங்குவது குறித்தும், அனுமதி தரப்பட்டுள்ள இடங்களில் புதிய கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்தும் முடிவு எடுத்து போலீசார் இன்று அக். 1ம் தேதி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications