‛ஆ ராசாவுக்கு எதிராக போஸ்டர்’.. இந்து முன்னணி நிர்வாகிகள் மீதான வழக்கு ரத்து.. ஹைகோர்ட் அதிரடி
சென்னை: திமுக எம்பி ஆ ராசாவை கண்டித்து போஸ்டர் ஒட்டிய இந்து முன்னணி நிர்வாகிகள் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆ ராசா. இவர் திமுகவில் துணை பொது செயலாளராக உள்ளார். அதோடு நீலகிரி லோக்சபா தொகுதி எம்பியாக உள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் மீண்டும் நீலகிரி தொகுதியில் திமுக சார்பில் ஆ ராசா போட்டியிட்டார்.

இந்த தொகுதியில் அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மத்திய இணை அமைச்சரும், பாஜக வேட்பாளரமான முருகனை வீழ்த்தி வாகை சூடினார். இதன்மூலம் மீண்டும் அவர் நீலகிரி எம்பியாகி உள்ளார்.
ஆ ராசாவின் பேச்சுக்கள் என்பது அடிக்கடி சர்ச்சைகளை கிளப்பும். குறிப்பாக பெரியாரின் கருத்துகளை அவர் மேடைகளில் பேசும்போது பாஜகவினர், இந்துத்துவாக அமைப்பினர் அவருக்கு கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இந்நிலையில் தான் கடந்த 2022ம் ஆண்டில் சென்னையில் நடந்த கூட்டத்தில் ஆ ராசா கோவில் செல்லும் இந்துகள் குறித்து பேசியது சர்ச்சையானது. இதைக் கண்டித்து இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக போஸ்டர் ஒட்டப்பட்டது. அதுமட்டுமின்றி மத அரசியல் செய்து வெறுப்புணர்வை தூண்டியதாக பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமத்திலும், பசும்பலூர் பேருந்து நிலையத்தில் ஆ ராசாவை கண்டித்தும், அவரின் எம்பி பதவியை பறிக்க வேண்டும் எனவும் இந்து முன்னணியினர் போஸ்டர் ஒட்டியிருந்தனர்.
இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்தவர்களான ஆனந்தராஜ், வெங்கடேசன்,ரஞ்சித் குமார் ஆகிய இந்து முன்னணியினர் மீது வி.களத்தூர் காவல் நிலையத்தில் திமுக நிர்வாகி ஜெயபால் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி இந்து முன்னணியை சேர்ந்த 3 பேரும் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
அதில், வழக்குப்பதிவு செய்து ஓராண்டுக்கு மேலாகியும், வழக்கில் இறுதி அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை என்றும் அரசியல் நோக்கதுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், இந்து முன்னணியினர் 3 பேர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். இதனால் இந்து முன்னணியினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications