68 தமிழக மீனவர்கள் கைது...நிரந்தர தீர்வு காண மத்திய அரசுக்கு சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 68 மீனவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கை எடுக்க இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: தமிழக மீனவர்கள் 68 மீனவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கை எடுக்க இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 68 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி அகில இந்திய மீனவர் காங்கிரஸ் அமைப்பின் தேசிய துணைத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
கடந்த 1974ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தில், கச்சத்தீவுக்கு புனித பயணம் செல்லும் பக்தர்களை, எந்தவித போக்குவரத்து ஆவணங்களும் இல்லாமல் அனுமதிக்க வேண்டும் எனவும், இந்திய - இலங்கை கப்பல்கள், இருநாட்டு கடல் பகுதிகளில் செல்ல உரிமை உள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தப் பிரிவுகளை அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

சென்னை ஹைகோர்ட்
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மீனவர்கள் எதற்காக எல்லை தாண்டி செல்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை நீதிமன்றத்தை தான் அணுக வேண்டும். அன்னிய நாட்டை இந்நீதிமன்ற உத்தரவால் நிர்வகிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், மீனவர்கள் கைது அனுதாபம் தெரிவிக்க மட்டுமே முடியும்.

முடிவில்லாமல் நீளும் பிரச்சினை
இந்திய அரசு ராஜாங்க ரீதியாக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்த தலைமை நீதிபதி, முடிவில்லாமல் நீண்டு கொண்டிருக்கும் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என தமிழக அரசுக்கும் யோசனை தெரிவித்தார். பின்னர், 68 மீனவர்களை விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

தொடர்கதையாகும் மீனவர்கள் கைது
எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கும்படி மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அன்மையில் மீனவர்கள் கைது செய்யப்பட்டதோடு அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு அவை ஏலம் விடப்பட்டது. இதற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

68 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை
இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும் அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 68 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications