டாஸ்மாக் அலுவலகத்தில் நள்ளிரவை தாண்டி நடந்த அமலாக்க துறை சோதனை.. சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதற்கு எதிராகத் தமிழக அரசு வழக்குகளைத் தொடர்ந்து இருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் செந்தில் குமார் வழக்கு விசாரணையில் விலகிய நிலையில், எஸ்.எம் சுப்ரமணியன் & ராஜசேகர் அமர்வில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறை நடத்திய சோதனையை சட்ட விரோதமானது என அறிவிக்க கோரி தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கில் அமலாக்கத்துறை பதில் மனுவுக்கு பதில் அளிக்க அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை சோதனை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியிருந்தனர். டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை மதுபான கடைகளுக்குக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் 1000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது.

Tasmac ED Chennai high court

டாஸ்மாக் அலுவலகத்தில் சோதனை

அமலாக்கத் துறையின் இந்த சோதனையை அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது என அறிவிக்கக் கோரியும், அரசு அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையைச் சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரியும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளைத் துன்புறுத்தக் கூடாது என அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி தமிழக உள்துறை செயலாளரும், டாஸ்மாக் நிர்வாக இயக்குநரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கை முதலில் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.செந்தில் குமார் அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள், டாஸ்மாக் அலுவலகம் சென்றதற்கான காரணங்களை அமலாக்கத் துறை தெரிவித்திருக்க வேண்டும். இரவில் ஏன் சோதனை நடத்தப்பட்டது என அமலாக்கத் துறைக்குக் கேள்வி எழுப்பினர். இதை மறுத்த மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், இரவில் சோதனை நடத்தப்படவில்லை. அனைவரும் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர் என விளக்கமளித்தார்.

நீதிமன்றம்

இருப்பினும் நீதிபதிகள், பொய் சொல்ல வேண்டாம். அனைத்தும் செய்தித்தாள்களில் வெளியாகியுள்ளது எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், அமலாக்கத் துறை தனது அதிகாரத்தைச் செயல்படுத்திய விதத்தைத் தான் கேள்வி எழுப்புகிறோம் எனக் கூறி, இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டனர். அதுவரை இந்த வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டனர். மேலும், எந்த வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது என்பது குறித்த விவரங்களையும் பதில் மனுவில் தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தனர்.

விலகல்

மேலும், இந்த விவகாரத்தில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் சார்பிலும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இதற்கிடையே கடந்த மார்ச் 25ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.செந்தில் குமார் வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.

விசாரணை

இதையடுத்து இப்போது இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம் சுப்ரமணியன், ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு ஒதுக்கப்பட்டது. அதன்படி இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், 60 மணி நேரம் சோதனை நடத்தி பெண் அதிகாரிகளை நள்ளிரவு வரை சிறை பிடித்துள்ளனர். மனித உரிமை மீறல் இது. அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள பதில் மனுவுக்கு பதில் அளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நீதிபதிகள் உத்தரவு

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தமிழகக் காவல்துறை சோதனை நடத்தியது இல்லையா எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு நள்ளிரவில் சோதனை நடத்தியதில்லை எனத் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பதில் அளித்தார். மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், தமிழக அரசின் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், அமலாக்கத்துறை பதில் மனுவுக்கு பதில் அளிக்கத் தமிழக அரசுக்கு அனுமதி அளித்து, வழக்கு விசாரணையை ஏப்ரல் 8ம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+