நாளுக்கு நாள் மோசம்! Horn அடித்ததை தட்டிக்கேட்டவரை வீடு புகுந்து வெட்டிய கும்பல்! சென்னையில் ஷாக்
சென்னை: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு விவகாரம் குறித்து ஆளுநர் டெல்லி சென்று அமித் ஷாவிடம் அறிக்கை கொடுத்துவிட்டு, இன்று தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபியை நேரில் அழைத்து விளக்கம் கேட்கும் அளவுக்கு நிலைமை தீவிரமடைந்துள்ளது. இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில், தலைநகர் சென்னையின் முக்கியப் பகுதியான பட்டினப்பாக்கத்தில் நடந்துள்ள ஒரு கொடூரத் தாக்குதல் சம்பவம் பொதுமக்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
காவல் நிலையத்தில் புகார் அளித்த சில மணி நேரங்களிலேயே, புகார் கொடுத்த நபரையும் அவரது குடும்பத்தினரையும் ஆயுதங்களுடன் வந்த கும்பல் விரட்டி விரட்டி வெட்டியிருப்பது, சென்னையில் ரவுடிகளுக்கும் போதை இளைஞர்களுக்கும் சட்டத்தின் மீதான பயம் துளியும் இல்லை என்பதையே காட்டுகிறது.

பைக் ஹாரன் அடித்ததில் தொடங்கிய தகராறு
சென்னை பட்டினப்பாக்கம் அடுத்த சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நீலகண்டன். இப்பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் நேற்று மாலை சந்தோஷ் என்ற இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்ததுடன், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து அதிக சத்தத்துடன் ஹாரன் அடித்துக்கொண்டு அட்டகாசம் செய்துள்ளார்.
இதனைப் பார்த்த நீலகண்டன், "குடியிருப்புப் பகுதியில் ஏன் இப்படி ஹாரன் அடித்துத் தொந்தரவு செய்கிறாய்?" என்று சந்தோஷைக் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ், நீலகண்டனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், "என்னையே தட்டிக்கேட்கிறாயா? உன்னையும் உன் குடும்பத்தினரையும் கொன்றுவிடுவேன்" எனக் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
புகார் கொடுத்தும் பாதுகாப்பு இல்லை: இரவில் நடந்த வெறிச்செயல்
சந்தோஷின் மிரட்டலால் அச்சமடைந்த நீலகண்டன், நேற்று மாலையே பட்டினப்பாக்கம் காவல் நிலையத்திற்குச் சென்று சந்தோஷ் மீது புகார் அளித்துள்ளார்.
ஆனால், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட தகவல் தெரிந்ததும் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற சந்தோஷ், இரவு நேரத்தில் தனது நண்பர்கள் கொண்ட கும்பலுடன் ஆயுதங்களோடு சீனிவாசபுரம் பகுதிக்கு வந்துள்ளார். நீலகண்டனின் வீட்டை முற்றுகையிட்ட அந்தக் கும்பல், அவரைத் தெருவில் விரட்டி விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டியது.
நீலகண்டனின் அலறல் சத்தம் கேட்டு அவரைக் காப்பாற்ற ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களையும் அந்தக் கும்பல் விட்டுவைக்கவில்லை. தடுக்க வந்தவர்களையும் அந்த வெறிக்கும்பல் கண்மூடித்தனமாக வெட்டித் தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பியோடியது.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.. போலீசார் வலைவீச்சு
இந்தக் கொடூரத் தாக்குதலில் பலத்த வெட்டுக்காயமடைந்த நீலகண்டன் மற்றும் தடுக்க வந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த பட்டினப்பாக்கம் போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள சந்தோஷ் மற்றும் அவரது நண்பர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
அச்சத்தில் உறைந்துள்ள பொதுமக்கள்
ஏற்கனவே தீபாவளி தொடர் கொலைகள், மதுரையில் நகைக்கடை கொள்ளை என மாநிலம் முழுவதும் சட்டம் - ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளது. இந்தச் சூழலில், ஒரு சாதாரண பைக் ஹாரன் விவகாரத்தில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நபரையே வீடு புகுந்து வெட்டும் அளவுக்குத் துணிச்சல் வந்திருப்பது சாமானிய மக்களைப் பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. காவல் நிலையத்தில் புகார் அளித்த உடனேயே போலீசார் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த ரத்தக் களறியைத் தடுத்திருக்கலாம் என்பதே அப்பகுதி மக்களின் குமுறலாக உள்ளது.


Click it and Unblock the Notifications
