அது என்ன பிசு பிசுன்னு ஒட்டுதே.. சென்னை காசிமேடில் 350 கிலோ அழுகிய, நாற்றமெடுத்த மீன்கள்.. ஒரே பரபர
சென்னை: சென்னை காசிமேட்டில் விற்கப்படும் மீன்களுடன், வெளிமாநில, வெளிமாவட்ட மீன்களும் கலந்து விற்கப்படுவதாக புது புகார் கிளம்பி உள்ளது.. இதையடுத்து, காசிமேட்டு மீனவர்கள், உணவு பாதுகாப்பு துறையினருக்கு புகார்களை தந்திருந்ததன் அடிப்படையில், அதிரடி ஆய்வுகள், சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சென்னை காசிமேட்டில் 3000-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளும், 800-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும் தினசரி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இங்குள்ள மீனவர்கள் வாரஇறுதி விடுமுறையை கணக்கு செய்து, முன்கூட்டியே மீன்பிடிக்க சென்றுவிடுவார்கள்.. இதனால், சனிக்கிழமை இரவும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் காசிமேட்டில் கூட்டம் அமோகமாக இருக்கும்.

மீன் பிரியர்கள்: பிடித்த சில மணி நேரங்களிலேயே மீன்கள் கிடைப்பதால், மீன்பிரியர்கள் காசிமேட்டுக்கு நேரடியாக சென்று மீன் வாங்கிவிடுவார்கள். இந்த கூட்டத்தை பயன்படுத்தி, உள்ளூர் மீன்களுடன், தரமற்ற, ரசாயனம் பூசப்பட்ட, வெளி மாநில மீன்கள் கலந்து விற்கப்படுவதாக, காசிமேடு சிறிய விசைப்படகு உரிமையாளர் சங்கத்தினர் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
தரமற்ற, துர்நாற்றத்துடன் கடம்பா உள்ளிட்ட மீன்களை தாங்கள் 2 தினங்களுக்கு முன்புகூட பறிமுதல் செய்ததாகவும், வெளிமாநிலத்திலிருந்து கெட்டுப்போன மீன்களை கொண்டுவந்து, காசிமேட்டு மீன்களுடன் கலந்து விற்பதாகவும் குற்றம் சாட்டுகிறார்கள்.
கெட்டுப்போன மீன்: அதுமட்டுமல்ல, வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து தரமற்ற, ரசாயனம் பூசப்பட்ட மீன்களை, துறைமுகத்தில் தான் பிடிக்கப்பட்டது என்று ஏமாற்றி விற்பதுடன், இந்த கெட்டுப்போன மீன்களை பதப்படுத்தி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதாகவும் உணவுத்துறை அதிகாரிகளிடம் மீனவர்கள் புகார் தந்தனர். மீனவர்கள் தந்த இந்த புகாரின் அடிப்படையில் நேற்று முழுவதும் உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள், காசிமேட்டில் சோதனையை மேற்கொண்டனர்..
உணவு பாதுகாப்பு துறையின், சென்னை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தியிருந்தனர.. வெங்கட் என்பவரது மீன் விற்பனை ஷெட்டில், அதிகமான சோதனை நடைபெற்றது..
குடோன்கள்: அதேபோல, ஒவ்வொரு கடைகளாக அதிகாரிகள் ஆய்வு செய்து, குடோன்களில் வைக்கப்பட்டிருந்த மீன்களின் தரத்தையும் சோதனை செய்தனர். அதில், இறால், நண்டு, வவ்வால், சூறை, கடம்பா, வாலை, வஞ்சிரம் உள்ளிட்ட மீன்கள், தரமற்றதாக இருப்பது கண்டறியப்ப்டடது. அவற்றை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து, உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் சொல்லும்போது, "காசிமேடு சந்தையில் உள்ள கடைகள், குடோன்களில் ஆய்வு செய்தோம். கெட்டுப்போன, 350 கிலோ மீன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. அவற்றை பறிமுதல் செய்து, பினாயில் ஊற்றி முறையாக அழிக்கப்பட்டது.
மீன்கள் பறிமுதல்: பறிமுதல் செய்யப்பட்ட மீன்களில் இருந்து, 6 இடங்களில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, சோதனைக்கு அனுப்பியிருப்பதால், அதன் முடிவுகள் வர ஓரிரு வாரங்கள் ஆகும். அதற்கு பிறகே உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சுகாதாரமற்ற முறையில் மீன்களை விற்பனை செய்த 2 கடைகளுக்கு தலா, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தரமற்ற மீன் விற்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications