ஸ்டாலினின் கொளத்தூரில் கால் வைத்த அண்ணாமலை.."குண்டூசி திருட்டாவது இருக்கானு சொல்லுங்க? மலைத்த சென்னை
சென்னை: பாஜகவுக்கு வாய்ப்பு கொடுத்தால் உலகத்தரம் வாய்ந்த சென்னையை உருவாக்குவோம் என்று மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் "என் மண் என் மக்கள் நடைபயணம்" பெரும் எதிர்பார்ப்பை ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஏற்படுத்தி வருகிறது. மாவட்டந்தோறும், சாலையின் வழியெங்கும் அண்ணாமலைக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.. ஏராளமான பெண்களும், குழந்தைகளும் அண்ணாமலையுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்து வருகிறார்கள்.
நடைபயணம்: இந்த யாத்திரை, வெறுமனே, ஒரு நடைபயணமாக முடிந்துவிடாமல், செல்லும் இடங்களிலெல்லாம் மக்களை சந்தித்து, அவர்களின் குறைகளையும் கேட்டறிந்து வருகிறார் அண்ணாமலை.

அதுமட்டுமல்லாமல், மத்திய அரசின் திட்டங்களையும், அந்த திட்டங்களினால் கிடைத்த பலன்களையும், மக்களிடம் நேரடியாகவே சொல்லி வருவதுடன், திமுக அரசின் குறைகளையும் மறக்காமல், லிஸ்ட் போட்டு சொல்லியும் வருகிறார்.
கொளத்தூர்: அந்தவகையில், கொளத்தூர் சட்டபேரவை தொகுதியில், நடைபயணத்தின் பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை கலந்து கொண்டார்.. அப்போது, திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர்.
பின்னர் பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது: "எம்பி தேர்தலில் வெற்றி பெற்று 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்க வேண்டும் என்று சாமானிய மக்கள் அனைவருமே நினைக்கிறார்கள்... ஒரு சாமானிய மனிதர் நினைத்தால்தான் அரசியல் சுத்தமாகும்.
தண்ணீர்: ஒவ்வொரு வருடமும் சென்னையில் பெய்யும் மழையின்போது, கொளத்தூர் மக்கள் 8 நாட்கள் தண்ணீருக்குள்ளேயே இருக்கிறார்கள். மழை பெய்தால் வாரக்கணக்கில் இங்கே தண்ணீர் தேங்குகிறது.. ரோடெல்லாம் குண்டும் குழியுமாக இருக்கிறது.. குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளும் சென்னையில் அவ்வளவாக இல்லை.
மோடியை போன்ற சாமானிய மனிதர் ஆட்சிக்கு வரும்போது, இந்தியாவும் வளரும், ஒவ்வொரு மாநிலமும் வளரும்... 10 வருட ஆட்சியில் ஒரு குண்டூசியை திருடிவிட்டார் என்ற குற்றச்சாட்டைக்கூட மோடி அரசு மீது வைக்க முடியாது.. பாஜக எம்பிக்கள் உள்ள தலைநகரங்கள் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டிருக்கிறது.. ஆனால், இந்த தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மட்டும், 3 தொகுதிகளில் திமுக குடும்ப ஆட்சி நடக்கிறது.. அவர்களுக்கு சாமானிய மனிதனின் வலி தெரிவதில்லை.
பாஜக ஆட்சி: வரும் தேர்தலில் 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மெஜாரிட்டின் பாஜக ஆட்சி அமைக்கப்போகிறது.. திமுக ஆட்சியில் மத்திய அரசு எவ்வளவு நிதி தமிழகத்துக்கு தந்தாலும், அது சாமானிய மனிதனின் வாழ்க்கையை மாற்றக்கூடிய நிதியாக மாறுவதில்லை...
திமுக ஆட்சி மீது மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள்.. அதனால், பாஜகவின் தொலைநோக்கு பார்வை உடைய எம்பிக்கள் தமிழகத்துக்கு வேண்டும்.
கிளாம்பாக்கம்: மற்ற ஊர்களில் வெளியூர் செல்வதற்கு பஸ் ஏறுவோம். ஆனால், சென்னைக்காரர்கள் வெளியூர் செல்வதற்கு, வெளியூருக்கு போய்தான் பஸ் ஏறவேண்டும். சென்னையில் வாழ மக்கள் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். முழுமையாக சென்னை மாநகரை சரிசெய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. பாஜகவுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்கள்... உலகத்தரம் வாய்ந்த சென்னை மாநகரை உருவாக்க வேண்டும் என்றால், மோடியின் கையில் சென்னையை ஒப்படைக்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications