கோயம்பேடு மேம்பாலத்தில் இரவில் பைக்கில் பறந்த உருவம்.. அத்தனை இரும்பு தடுப்பை அமைத்தும்? பரபர சென்னை
சென்னை: சென்னையில் நள்ளிரவில் அனைத்து சாலைகளிலும், எந்தவிதமான அசம்பாவித சம்பவங்கள் நடந்துவிடக்கூடாது என்பதற்காக, போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதேபோல சென்னையில் பைக் ரேஸ் காரணமாக விபத்துக்கள் நடப்பதால், சாலையின் பிரதான பகுதிகளில் இரும்பு தடுப்புகளை அமைத்தும் வருகின்றனர்.. இதன்காரணமாக பைக் ரேஸ் குறைந்துள்ளன. எனினும் சில இடங்களில் மீண்டும் பைக் ரேஸ் தலைதூக்கி வருவது சென்னைவாசிகளை கவலை கொள்ள செய்துள்ளது.
சமீப காலமாக, இணையவாசிகளின் கவனத்தை தங்கள் மீது திருப்புவதற்காக இளைய தலைமுறையினர் பலர் ரிஸ்க்கான காரியங்களில் இறங்கி வருகிறார்கள்.. முக்கியமாக, பைக் சாகசங்களை நடத்தி காட்டுவதில் ஆர்வம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.

கரணம் தப்பினால் மரணம் என்று அறிந்தும், இந்த இளைஞர்கள் பைக் ரேஸை அசால்ட்டாக ஓட்டுகிறார்கள்.. சாலை விபத்துகளும் தமிழகத்தில் பெருக இதுவும் ஒரு காரணமாகிவிடுகிறது.. அதிலும் இந்த இளைஞர்களில் பெரும்பாலானோர் ஹெல்மெட் கூட தலைக்கு போட்டுக் கொள்வதில்லை.. கடும் வேகத்தில், பயங்கர சத்தத்துடன் அதுவும், இரவு நேரங்களில் சாலையில் தீப்பொறிகளை பறக்கவிட்டவாறு, சாலைகளில் பறக்கிறார்கள்.
அப்பாவி மக்களின் உயிர்
இதில் வேதனை என்னவென்றால், பைக்கில் சிக்குவோர் பெரும்பாலும் 15 வயதிற்கு மேல் 25 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களாக இருக்கிறார்களாம். ரேஸ் பைக்கில் இவர்கள் விபத்தை சந்திப்பதுடன், எதிரே வரும் அப்பாவி மக்களின் உயிர்களையும் சேர்த்தே வாங்கிவிடுகிறார்கள்.. பலருக்கும் கை, கால்களில் அடிபட்டு, துயரத்தை சந்திக்கும் நிலைமை உள்ளது. எனவேதான், பைக் ரேஸ் பற்றி நம்முடைய போலீசாரும் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.
இதில் ஒருசிலர், நடுரோட்டில் பைக்கை நிறுத்திவிட்டு, போட்டோ ஷூட் எடுப்பதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள். சில நாட்களுக்கு ஈசிஆர் ரோட்டில் கோவளம் அடுத்த குன்னுக்காடு பகுதியில், 50-க்கும் மேற்பட்டோர் காஸ்ட்லி பைக்குகளில் ரேஸில் ஈடுபட்டிருந்தபோது, அத்தனை பேரையும் போலீசார் சுற்றிவளைத்து பிடித்தது. அத்தனை பேரும் இளைஞர்கள் என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அறிவுரை சொல்லி, எச்சரிக்கை தந்து அனுப்பி வைத்தனர் போலீசார்.
கடிவாளம் போட்டும் திருந்தல
இத்தனை கடிவாளம் போட்டும்கூட, சில மீண்டும் பகீரை கிளப்பி கொண்டிருக்கிறார்கள். சென்னை அண்ணாநகரில் பைக் சாகசத்தில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.. பைக் ரேசில் இளைஞர்கள் கோயம்பேடு மேம்பாலம் உள்பட பல பகுதிகளில் நள்ளிரவில் பைக் ரேஸ் நடப்பதாக, அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு புகார் தந்திருந்தனர்.. இதனால், இரவு நேரங்களில் சாலையில் செல்வதற்கு பயமாக இருப்பதாகவும் அச்சம் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து, கோயம்பேடு, திருமங்கலம் , வில்லிவாக்கம் மேம்பாலங்கள் இரவு நேரத்தில் இரும்பு தடுப்பு வைத்து மூடப்பட்டு வருகிறது. இதுபோக ரோந்து போலீசாரின் கண்காணிப்பும் உள்ளது.
கோயம்பேடு மேம்பாலம்
இவ்வளவு கட்டுப்பாட்டையும் மீறி நேற்றுமுன்தினம் நள்ளிரவு கோயம்பேடு மேம்பாலத்தில் உள்ள இரும்பு தடுப்பை மீறி ஏராளமான இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டனர். அப்போது சாலையில் பயங்கர சத்தத்தை எழுப்பி, அதிவேகத்துடன் வரிசையாக கூச்சலிட்டுக் கொண்டே சென்றுள்ளனர்.. அத்துடன், இவைகளை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாகவும் வெளியிட்டுள்ளனர்.
அதில், "அடுத்த வாரம் பைக் ரேஸ் பந்தயம் 20 ஆயிரம்" என்றும் அதில் பதிவிட்டிருக்கிறார்கள். இந்த ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலானது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், நேற்றிரவு கோயம்பேடு, அண்ணாநகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சோதனையை தீவிரப்படுத்தினர்.
2 சிறுவர்கள் சிக்கினர்
அப்போது, அண்ணாநகர் வழியாக ரேஸ் பைக்கில் வந்த 2 பேர், போலீசாரை கண்டதும் தப்பிக்க முயன்றனர்.. ஆனால் போலீசார் விடாமல் விரட்டிச்சென்று இருவரை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் 2 பேருமே 18 வயது நிரம்பாத சிறுவர்கள் என்பது தெரியவந்தது. இருவருமே அம்பத்தூரை சேர்ந்தவர்கள். எனவே, அவர்களிடமிருந்து பைக்கை பறிமுதல் செய்தனர் போலீசார்.
இரவு நேரங்களில் மேம்பாலங்களை இரும்பு தடுப்பு அமைத்து அடைத்தும்கூட, பைக் ரேஸ்கள் தலைநகரில் தலைதூக்கியிருப்பது, சென்னைவாசிகளை பீதியடைய செய்துள்ளது..
பெற்றோர்கள் வாக்குவாதம்
முன்னதாக, அண்ணாநகரில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான 9 பேரிடம் இருந்து இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து தங்களது பிள்ளைகளை விடுவிக்கக் கோரி பெற்றோர்கள், சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து, போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் சொல்லும்போது, "பைக் ரேஸ் நடத்திய இளைஞர்களின் வாகனங்களில் பதிவு எண் தகடு இல்லை. இருப்பினும், போக்குவரத்து புலனாய்வு போலீசார் 5 பேர், அடாவடி இளைஞர்களை பிடிக்க முயற்சித்து வருகின்றனர்.
கோயம்பேடு - அடையாறு வரையில், கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். ஆபத்தான வகையில் வாகனம் ஓட்டியவர்கள் யாராக இருந்தாலும், வழக்கு பதிந்து, 10,000 ரூபாய் அபராதம் விதிப்பதுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம்" என்றனர்.












Click it and Unblock the Notifications