மதுரவாயல் டூ துறைமுகம்.. சென்னை ஸ்ரீபெரும்புதூர் உயர்மட்ட சாலைக்கு திட்ட அறிக்கை.. சென்னைக்கு ஹேப்பி
சென்னை: இந்திய மாநிலங்களிலேயே முதல்முறையாக 2 அடுக்கு சாலையாக அமைய உள்ளது சென்னை மதுரவாயல் - துறைமுகம் மேம்பால திட்டம்.. கடந்த 2 வருடங்களாகவே மிகப்பெரிய எதிர்பார்ப்பை சென்னையில் இந்த பாலம் ஏற்படுத்தி வருகிறது. இதற்கான பணிகள் துரிதமாக நடந்து வரும்நிலையில், தமிழக சட்டசபையில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் உயர்மட்ட சாலை
மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் மேம்பால சாலைத்திட்டம் என்ற புதிய உயர்மட்ட சாலை அமைக்க வேண்டும் என்று கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் முடிவானது. இதற்கான பணிகள் நடந்த நிலையில், அதிமுக ஆட்சிக்கு வந்தது.

கூவம் ஆற்றின் வழித்தடத்தை மாற்றக்கூடிய வகையில் இந்த திட்டம் உள்ளதாக கூறி, இந்த திட்டத்துக்கு அதிமுக அரசு தடை விதித்தது, பிறகு, 10 வருடம் கழித்து திமுக ஆட்சிக்கு வந்து, பாதியில் விட்ட திட்டத்தை மறுபடியும் கையிலெடுத்தது.
10 ஆண்டுக்கு பிறகு மீண்டும்
ரூ.5800 கோடி செலவில், நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடி இதற்கான அடிக்கல் நாட்டினார். மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் குழுவின் அனுமதியோடு, சிவானந்தா சாலை முதல் கோயம்பேடு வரை ஈரடுக்கு மேம்பாலம் பணிகள் ஆரம்பமாகின. கீழடுக்கில் உள்ளுர் வாகனங்கள், மேலடுக்கில் துறைமுகம் செல்லும் வாகனங்கள் என பணிகள் துரிதமாகின.
பிறகு துறைமுகம் - மதுரவாயல் இடையே அமைக்கப்படும் பறக்கும் சாலைக்கான மாதிரி படத்தை, மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி ட்விட்டரில் வெளியிட்டு, பலரது கவனத்தையும், ஆர்வத்தையும் ஈர்த்திருந்தார். அத்துடன், இந்த திட்டம் ஜூன் 2026ல் நிறைவடையும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் எ.வ. வேலு, செய்தியாளர்களிடம் பேசும்போது, "மதுரவாயல்-துறை முகம் ஈரடுக்கு மேம்பாலம் கட்டுமானத்திற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. எனவே, ஈரடுக்கு மேம்பாலத்தை கட்டி முடிக்கவேண்டும் என்பதில் நம்முடைய மாநில அரசு உறுதியாக உள்ளது" என்றார்.
மதுரவாயல் மேம்பாலம் - பலன்கள்
அமைச்சரின் இந்த நம்பிக்கை பேச்சு, சென்னைவாசிகளுக்கு குஷியை தந்து வருகிறது. காரணம், மதுரபாலம் மட்டும் செயல்பாட்டுக்கு வந்தால், சென்னை துறைமுகத்தில் சரக்குகளை கையாளும் திறன் அதிகரிக்கும், பயண நேரமும் குறையும்.. பகல் நேரங்களிலும் கனரக வாகனங்கள் சென்னைக்குள் அனுமதிக்கப்படலாம்.
துறைமுகத்தின் சரக்கு போக்குவரத்தில் ஏற்படும் பாதிப்புகள் தடுக்கப்பட்டு வருவாய் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்ல, மதுரவாயல் பகுதியில் இருந்துசரக்கு கொள்முதல் வாகனங்கள் எளிதாக போக்குவரத்து நெரிசல் இல்லாமல் துறைமுகம் சென்றுவர முடியும். ஆக மொத்தம், இந்தியாவிலேயே முதல்முறையாக 2 அடுக்கு சாலையாக அமைய உள்ளது நம்முடைய மதுரவாயல் மேம்பாலம்.
மதுரவாயல் - ஸ்ரீபெரும்புதுார் உயர்மட்ட மேம்பால சாலை
இந்நிலையில், மதுரவாயல் - ஸ்ரீபெரும்புதுார் இடையே, உயர்மட்ட மேம்பால சாலை அமைக்க, 1,400 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது என்று நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு மீண்டும் தெரிவித்திருக்கிறார்.. சட்டசபையில் கேள்வி நேர விவாதத்தின்போது, இதுகுறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
சுரங்க நடைபாதை
சட்டசபையில் திமுக உறுப்பினர் கிருஷ்ணசாமி பேசும்போது, "சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், நசரத்பேட்டை, திருமழிசை என, இரண்டு முக்கிய சந்திப்புகள் உள்ளன. ஆறு வழிச்சாலையாக மாறிய பிறகு, அங்கு ஓரளவுக்கு போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது.
நசரத்பேட்டை சந்திப்பை கடந்து, அகரம், மேப்பூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பாதசாரிகள் வருகின்றனர். இரு சக்கர வாகனங்களும் ஆயிரக்கணக்கில் அந்த சந்திப்பை கடந்து செல்கின்றன. அங்கு சினிமா நகரம் அமைக்கப்படும் எனவும் துணை முதல்வர் அறிவித்துள்ளார். எனவே, எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு, அங்கு மேம்பாலம் அல்லது சுரங்க நடைபாதை அமைக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
மீண்டும் அமைச்சர் உறுதி
இதற்கு அமைச்சர் வேலு பதிலளிக்கும்போது, "சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நசரத்பேட்டை, திருமழிசை சந்திப்புகளில் மேம்பாலம் கட்டுவதற்கு சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு, திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையில், மதுரவாயல் - ஸ்ரீபெரும்புதுார் சுங்கச்சாவடி வரை, 23 கி.மீ.,க்கு சேவை சாலையுடன், ஆறுவழிச்சாலை அமைக்கும் பணிகள், 495 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் செய்து முடிக்கப்பட்டு உள்ளன.
பாரிவாக்கம், திருமழிசை, தண்டலம், நசரத்பேட்டை ஆகியவற்றை உள்ளடக்கி, மதுரவாயல் - ஸ்ரீபெரும்புதூர் இடையே உயர்மட்ட மேம்பாலச்சாலை அமைக்க, 1,400 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, இந்த சாலை மேம்பாலம் கட்டுவதற்கு தமிழக அரசு முன்னுரிமை அளிக்கும்" என்றார்.












Click it and Unblock the Notifications