ஓசி பிரியாணி தாங்க.. மது போதையில் மாம்பலம் போலீஸ்காரர்கள் செஞ்ச வேலை.. வீடியோவால் வில்லங்கம்
சென்னை: சென்னை தியாகராய நகரில் இலவச பிரியாணி கேட்டு மது போதையில் தகராறு செய்ததாக மாம்பாலம் போலீஸார் இரண்டு பேர் மீது புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை தியாகராய நகர் சிவஞானம் தெருவில் 45 வயதாகும் காசிம் என்பவர் பிரியாணி கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி அன்று மதியம் , மாம்பலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் இரண்டு பேர் சென்றுள்ளனர்.

காவலர்கள் இருவரும் காசிமிடம் பிரியாணி கேட்டிருக்கிறார்கள். அப்போது காசிம் அவர்களிடம் இன்னும் வியாபாரம் ஆகவில்லை என்றும பணத்தைக் கொடுத்து பிரியாணி வாங்கிச் செல்லுமாறும் கூறினாராம்.
இதனால், காவலர்களுக்கும் பிரியாணி கடை உரிமையாளர் காசிமுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து சென்ற காவலர்கள், ஆகஸ்ட் 15ம் தேதி இரவு மீண்டும் காசிம் கடைக்குச் சென்று பிரியாணி சாப்பிட்டிருக்கிறார்கள்.
அப்போது காசிமிடம் இனி கடைநடத்த முடியாது என்று அவரை மிரட்டியதுடன், பிரியாணிக்கான பணத்தைக் கொடுக்காமல் தகராறில் ஈடுபட்டார்களாம். அப்போது, இரு காவலர்களும் மதுபோதையில் இருந்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.
கடையில் காவலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை, கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் சிலர் அப்படியே வீடு எடுத்திருக்கிறார்கள்.பின்னர் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
வீடியோ எடுத்த காரணத்தால் காவலர்கள், தங்கள் இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு உடனடியாக அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார்கள். இதனிடையே காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து வந்த தகவலின்பேரில் காசிம் கடைக்குச் சென்ற மாம்பலம் போலீஸ் உயர் அதிகாரிகள், பிரியாணி கடை உரிமையாளரிடம் புகார் பெற்று, இருசக்கர வாகனங்களயும் எடுத்து சென்றனர்.
மாம்பலம் காவல் உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அந்த வாகனங்கள் மாம்பலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் ஆனந்த், ஜெயபால் ஆகியோருக்குச் சொந்தமானது என்பது கண்டுபிடிக்கப்பட்து. இது ஒருபுறம் எனில் பிரியாணி கடையில் காவலர்கள் தகராறு செய்வது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியது. இதையடுத்து மேலதிகாரிகள் கவனத்திற்கு வீடியோ சென்றதால் விசாரணை நடத்துமாறு காவல் துறை உயரதிகாரிகள் உத்தரவிட்டனர். இதில், காவலர்கள் அத்துமீறியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, பிரியாணி கேட்டு கடையில் தகராறு செய்ததாக மாம்பலம் காவலர்கள் ஆனந்த் மற்றும் ஜெயபால் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த சம்பவம் திநகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications