நான் பேசுனது தப்புதான்.. மன்னிச்சிடுங்க! சென்னையில் போலீசாரை தரக்குறைவாக பேசியவரின் புதிய வீடியோ
சென்னை: சென்னை மெரினா லூப் சாலையில் இரவு வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ்காரரை ஆபாசமாக திட்டி வாக்கு வாதம் செய்த நபர், தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார். நான் பேசுனது தப்புதான்.. மன்னிச்சிடுங்க என்று அவர் வீடியோவில் பேசுகிறார். இது தொடர்பான வீடியோவை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
சென்னை மெரினா பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ஆண் - பெண் ஜோடியினர் மதுபோதையில் போக்குவரத்து போலீசாரை தரக்குறைவாக பேசுவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் போலீசாரை அவதூறாக தரைக்குறைவாக பேசியது வேளச்சேரியை சேர்ந்த சந்திரமோகன் என்பதும், அந்த பெண் அவரது தோழி தனலட்சுமி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து சந்திரமோகனை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் சந்திரமோகன் மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

போலீசிடம் வாக்குவாதம்: சென்னை மெரினா பட்டினப்பாக்கம் லூப் சாலையில் நேற்று இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு காரை நிறுத்திவிட்டு ஆண் - பெண் ஜோடியினர் காருக்கு வெளியே நின்றுகொண்டிருந்தனர். போலீசார் அவர்களை அங்கிருந்து கிளம்ப சொன்னதாக கூறப்படுகிறது. அப்போது ஆண் - பெண் ஜோடியினர் அங்கிருந்து செல்ல முடியாது என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சந்திரமோகன் கைது: போலீசை தரக்குறைவாக பேசி விமர்சித்தனர். செல்பி எடுப்பது போல் போஸ் கொடுத்து நக்கல் செய்தனர். போலீசாரை மிரட்டியும் பேசினர். ஏய்.. ஏன் வீடியோ எடுக்கிறாய். இங்கே இருக்கிற எல்லார் அட்டரசையும் எடுத்துவிடுவேன். என்னை எதுவும் செய்ய முடியாது. உதயநிதிட்ட பேசவா? என போலீசாருக்கு மிரட்டல் விடுத்து பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
போக்குவரத்து போலீசாரிடமே இப்படி திமிறாக பேசும் நபரை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் யார் என்று விசாரணை நடத்தினர். இதில் போக்குவரத்து போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டது வேளச்சேரியை சேர்ந்த சந்திரமோகன் என்பதும், அந்த பெண் மயிலாப்பூரை சேர்ந்த தனலட்சுமி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து மயிலாப்பூர் போலீசார் சந்திரமோகனை அதிரடியாக கைது செய்தனர்.
4 பிரிவுகளில் வழக்கு பதிவு: மயிலாப்பூர் போலீசார் சந்திரமோகன் மற்றும் அவரது தோழி தனலட்சுமி ஆகிய இருவர் மீதும் பி என் எஸ் 296 (பி), 132, 125, 351(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து இருவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். விசாரணையில் சந்திரமோகன் வேளச்சேரியில் வசித்து வருகிறார். கார் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
யார் இந்த சந்திரமோகன், தனலட்சுமி?: பிஎஸ்சி ஓட்டல் மேனேஜ்மன்ட் படிப்பு படித்துள்ள சந்திர மோகன் கோவையில் உள்ள ஒரு ஓட்டலிலும், ஆழ்வார்பேட்டையில் உள்ள செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள ஓட்டலிலும் சுமார் 3 வருடம் பணியாற்றியுள்ளார். இதன்பிறகு வேளச்சேரியில் கிளப்பில் பணியாற்றிய சந்திரமோகன் தற்போது கார்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருவது தெரியவந்துள்ளது. காரில் இருந்த அந்த பெண்ணின் பெயர் தனலட்சுமி.
சந்திரமோகனின் தோழியான தனலெட்சுமி மயிலாப்பூரி வசித்து வருகிறார். இவரது கணவர் மெக்கானி. இந்த தம்பதிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். நேற்று சந்திரமோகனும் தனலட்சுமியும் காரில் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு வந்துள்ளனர். அப்போது தான் காரில் இருந்து வெளியே நின்றுகொண்டிருந்தபோது போலீசாரிடம் தகராறு செய்யும் சம்பவம் நடந்துள்ளது.
மன்னிப்பு வீடியோ: கைது செய்யப்பட்ட சந்திரமோகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சந்திரமோகன் மன்னிப்பு கேட்கும் வீடியோவை போலீசார் வெளியிட்டுள்ளனர். அதில், நான் பேசுனது தப்புதான்.. மன்னிச்சிடுங்க என்று சந்திரமோகன் பேசும் வீடியோ பதிவாகியுள்ளது. போலீசார் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், "என் பெயர் சந்திரமோகன். நான் வேளச்சேரியில் வசித்து வருகிறேன். நேற்று எனது தோழியுடன் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு காரில் வந்தேன்.
இனி தவறாக பேசமாட்டேன்: இரவு 12 மணியளவில் நானும், எனது தோழியும் காரில் இருந்து வெளியே சாப்பிட செல்வதற்காக நின்றுகொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த போலீசார் எல்லாரையும் போக சொன்னதால் கோபத்தில் அப்படி பேசிவிட்டேன். தரக்குறைவாக பேசினேன். நான் கொஞ்சம் மது அருந்தியிருந்ததால் அப்படி பேசிவிட்டேன். இனி போலீசை தவறாக பேசமாட்டேன். நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கிறேன்.." இவ்வாறு அந்த வீடியோவில் அவர் பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications