லாரி மோதி விபத்து.. உடைந்த கார் கண்ணாடிகள்.. பதற்றத்துடன் சுற்றி வந்த மேயர் பிரியா? என்ன நடந்தது
சென்னை: சென்னை மேயர் பிரியா சென்ற கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதனிடையே கார் விபத்தில் சிக்கியதும் பதற்றத்துடன் காரை விட்டு இறங்கிய மேயர் பிரியா, காரின் பின்பக்கம் வந்து சேதம் அடைந்து இருப்பதை சற்று பதைபதைப்புடன் பார்த்தார்.
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சென்று கொண்டிருந்த கார் பூந்தமல்லி சென்னீர்குப்பம் அருகே விபத்தில் சிக்கியது. சென்னை நோக்கி தனது இன்னோவா காரில் நேற்று இரவு மேயர் பிரியா வந்து கொண்டிருந்தார். பூந்தமல்லி சென்னீர்குப்பம் மேம்பாலத்தில் இருந்து மேயர் பிரியாவின் கார் இறங்கி கொண்டு இருந்துள்ளது.

அப்போது மேயர் பிரியாவின் காருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த கார் திடீரென்று பிரேக் அடித்து நின்றுள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த மேயர் பிரியாவின் கார், முன்னால் சென்ற கார் மீது மோதியது. அதேவேளையில் காருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த லாரியும் மேயர் கார் மீது மோதியது. இதில் இரண்டு வாகனங்களுக்கு இடையே மேயர் பிரியாவின் கார் சிக்கியது.
காரின் முன்பகுதி மற்றும் பின்பகுதி சேதம் அடைந்து நொறுங்கியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காயங்கள் இன்றி மேயர் பிரியா தப்பினார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதிக்கு விரைந்து வந்த போலீசார், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். முன்னால் சென்ற காரின் டிரைவரிடம் விசாரணை நடத்தியதாக தெரிகிறது.
இதனிடையே கார் விபத்தில் சிக்கியதும் பதற்றத்துடன் காரை விட்டு இறங்கிய மேயர் பிரியா, காரின் பின்பக்கம் வந்து சேதம் அடைந்து இருப்பதை சற்று பதைபதைப்புடன் பார்த்தார். இதற்கு மத்தியில் போக்குவரத்து போலீசார், மாற்று வாகனத்தை ஏற்பாடு செய்த நிலையில், மேயர் பிரியா அங்கிருந்து புறப்பட்டு சென்றார். மேயர் பிரியா சென்ற வாகனம் விபத்தில் சிக்கி தகவல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் விபத்தில் சிக்கிக் கொண்டதால் விபத்து நடந்த சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் போலீசார் காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications