மழைக்காலத்துக்கு முன்பாக பணிகளை முடிக்க வேண்டும்! ஒப்பந்ததாரர்களிடம் மேயர் பிரியா ராஜன் கறார்!
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் அமைப்பதற்கான ஒப்பந்த ஆணைகளை ஒப்பந்ததாரர்களிடம் மேயர் பிரியா வழங்கினார்.
அப்போது பருவ மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னர் வடிகால் பணிகளை முழுமையாக முடித்துக்கொடுக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களிடம் அறிவுறுத்தியுள்ளார்.
புதிய மேயருக்கு இன்னும் சரியாக பேசவே தெரியவில்லை என விமர்சிக்கப்பட்ட நிலையில் அவரிடம் இப்போது படிபடியாக மாற்றங்கள் தென்படத் தொடங்கியிருக்கின்றன.

சென்னை மாநகராட்சி
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.176.94 கோடி திட்ட மதிப்பில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் தொடங்கப்படவுள்ளன. இதற்கான ஒப்பந்த ஆணைகளை ஒப்பந்ததாரர்களிடம் இன்று முறைப்படி வழங்கிய சென்னை மேயர் பிரியா ராஜன், டெண்டரில் குறிப்பிட்டுள்ள கால அவகாசத்துக்குள் பணிகளை முடித்துக் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறார். பருவமழை காலம் தொடங்குவதற்குள் மழை நீர் தேங்காதவாறு வடிகால் பணிகளை முடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை 2.0 திட்டம்
சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் இந்த மழை நீர் வடிகால் பணிகள் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்படுகின்றன. ஒப்பந்ததாரர்கள் எக்காரணத்தை கொண்டு பணியை இழுத்தடிக்க கூடாது என கேட்டுக்கொண்டுள்ள சென்னை மேயர் பிரியா ராஜன், எவ்வித தாமதமும் இன்றி உடனடியாக பணிகளை தொடங்க வேண்டும் என கறார் காட்டியுள்ளார். இதனிடையே ஒப்பந்தப் பணிகளை பார்வையிட மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் பகுதி வரியாக பொறியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.

முன்னுரிமை
கடந்த வாரம் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் நீங்க எதற்கு முன்னுரிமையும், முக்கியத்துடமும் அளிப்பீர்கள் என்ற கேள்விக்கு, மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்கு தான் தமது முன்னுரிமையும், முக்கியத்துவமும் என பதில் அளித்திருந்தார் சென்னை மேயர் பிரியா ராஜன். இன்று அதன்படி மழை நீர் வடிகால் அமைப்பதற்கான ஒப்பந்த ஆணைகளை வழங்கி சுறுசுறுப்பு காட்டத் தொடங்கியிருக்கிறார்.

கடந்த வருடம்
கடந்த வருடம் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழையால் சென்னை மாநகரே வெள்ளக்காடானது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து முதலமைச்சரே வேட்டியை மடித்துக்கொண்டு களமிறங்கியதால் ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் போர்க்கால அடிப்படையில் செயலாற்றியது. இதனிடையே இந்த ஆண்டு தண்ணீர் தேங்கி நிற்காதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போதே தொடங்கிவிட்டது மாநகராட்சி நிர்வாகம்.












Click it and Unblock the Notifications