சென்னை மீனம்பாக்கத்தில் அனுமதியின்றி கட்டிய கோவில்... அடியோடு இடித்து அகற்றிய ராணுவ வீரர்கள்
சென்னை: சென்னை மீனம்பாக்கம் குளத்து மேடு பகுதியில் ராணுவத்திற்கு சொந்தமான இடத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் புதிதாக வீடு கட்ட ராணுவம் அனுமதி மறுத்து வருகிறது. இந்த பகுதியில் உள்ள கருமாரியம்மன் கோவிலை விரிவாக்கம் செய்யும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று ராணுவ வீரர்கள் கோவில் கட்ட மறுப்பு தெரிவித்து, புதிதாக கட்டிய கோவில் பணிகளை நிறுத்தி கடப்பாரையால் கட்டுமானங்களை இடித்து அகற்றினர்.
சென்னை விமான நிலையத்தை அடுத்து உள்ள பரங்கிமலையில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கழகம் (Officers Training Academy - OTA) செயல்பட்டு வருகிறது. இது இந்திய ராணுவத்திற்கான குறுகிய கால சேவை அதிகாரிகளுக்கான பயிற்சி மையம் ஆகும். இந்த பயிற்சி மையம் 1963 முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு ராணுவ அதிகாரிகள் பயிற்சி, இளம் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி, மற்றும் பல்வேறு ராணுவ சாகச பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. பெண்களுக்கு ராணுவ பயிற்சி அளிக்கும் மையமாகவும் இருக்கிறது. இந்தியாவின் மிக முக்கியமான ராணுவ பயற்சி மையமாக இது இயங்கி வருகிறது.

இந்நிலையில் சென்னை ஆலந்துரில் இருந்து மீனம்பாக்கம் விமான நிலையம் வரை ஏராளமான ஏக்கரில் ராணுவத்திற்கு சொந்தமான இடம் இருக்கிறது. மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக மீனம்பாக்கம் முதல் ஆலந்தூர் வரை இருக்கிறது. இந்நிலையில் மீனம்பாக்கம் குளத்துமேடு பகுதியில் ராணுவத்திற்கு சொந்தமான இடத்தில், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிசை அமைத்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு ரேஷன் கார்டு, மின்சாரம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்றவை பெற்றுள்ளனர். பல ஆண்டுகளாக இருந்தாலும், இந்த இடம் ராணுவ இடம் என்பதால், புதிதாக வீடு கட்டவோ, மாற்றி அமைக்கவோ ராணுவம் தடை விதித்துள்ளது.
இந்த குளத்துமேடு பகுதியில் கருமாரியம்மன் ஆலயம் உள்ளது. இங்கு 80 வயதாகும் சங்கர் என்பவர் பூசாரியாக உள்ளார். இந்த கோயிலை விரிவாக்கம் செய்ய கடந்த வாரம் கட்டுமான பணியை இவர் தொடங்கியிருக்கிறார். இதுபற்றி அறிந்த 20க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் நேற்று மதியம், துப்பாக்கி ஏந்தியபடி அங்கு வந்தனர். கோயில் கட்டுமான பணியை அனுமதி பெறாமல் எப்படி தொடங்கினீர்கள் என எச்சரித்தனர்.
மேலும் ராணுவ அனுமதி பெறாமல் கோவிலை விரிவாக்கம் செய்யக்கூடாது எனக்கூறி, புதிய கட்டுமானத்தை இடித்து அகற்றினர். தடுக்க வந்த பொதுமக்களையும் விரட்டியடித்தனர். தகவல் அறிந்து, அங்கு வந்த மீனம்பாக்கம் போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications