சென்னையே நிமிருது.. மீண்டும் NO:1 இடத்தை தட்டிப்பறித்த சென்னை மெட்ரோ.. சாதனைக்கு காரணம் என்ன தெரியுமா
சென்னை: சென்னை மெட்ரோ மகிழ்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.. இதனால் சென்னைவாசிகள் பூரித்து போயுள்ளனர்.
சென்னையில் உள்ள மக்களுக்கு ரயில்சேவைகளின் தேவை அத்தியாவசியமானதாக இருந்து வருகிறது.. இதில் மெட்ரோ ரயிலின் பயன்பாட்டை குறிப்பிட்டு சொல்ல வேண்டி உள்ளது.

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு கியூஆர் குறியீடு பயணச்சீட்டு + பயண அட்டைகளை பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு, 20 சதவீத கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது.
பயன்பாடுகள்: சென்னை பெருநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையிலும், விரைவான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்துக்காகவும், சென்னை மக்கள் அதிகம் நாடுவது, மெட்ரோ ரயிலாகவே இருந்து வருகிறது. அதனால்தான், மெட்ரோவின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே வருகிறது.. மெட்ரோவில் மக்களின் பயன்பாட்டு எண்ணிக்கை குறித்து, மெட்ரோ நிறுவனமானது, முக்கிய தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.
ஜூலை மாதம்: அந்தவகையில், கடந்த 7 மாதங்களில் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை 25 சதவீதம் உயர்ந்துள்ளதாம். கடந்த ஜனவரி மாதம் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தவர்கள் எண்ணிக்கை மட்டுமே, சராசரியாக ஒரு நாளைக்கு 2.13 லட்சமாக இருந்துள்ள நிலையில், கடந்த ஜூலை மாதத்தில் 2.66 லட்சமாக அதிகரித்துள்ளது. ஜூலை மாதத்தில், ஒரு நாளைக்கு சராசரியாக 23,473 பயணிகள் சென்ட்ரல் மெட்ரோவை பயன்படுத்தினர்.
இதற்கு அடுத்ததாக திருமங்கலம், ரெட்டேரி, கொளத்தூர், பாடி, முகப்பேர் உள்ளிட்ட ஏராளமான பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்தும் திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் தினமும் சராசரியாக 13,934 பேர் பயணம் செய்திருககிறார்கள்.
ஆயிரம் விளக்கு: கிண்டி மெட்ரோவில் உள்ள இன்டர்-மாடல் ஒருங்கிணைப்பு, அதை புறநகர் நிலையத்துடன் இணைக்கிறது. இதன் விளைவாக ஒரு நாளைக்கு சராசரியாக 13,112 பயணிகள் மெட்ரோவை பயன்படுத்தியிருக்கிறார்கள்.. தாம்பரம் மற்றும் குரோம்பேட்டை உள்ளிட்ட தெற்கு புறநகர் பகுதியினர் பயன்படுத்தும் ஏர்போர்ட் மெட்ரோவில், மொத்தம் 13,088 பேர் பயணம் செய்தனர். ஆயிரம் விளக்கு மெட்ரோவில் தினமும் 11,219 பேர் பயணம் செய்துள்ளனர்.
அந்தவகையில், பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பின் அடிப்படையில், சென்னை சென்ட்ரல் மெட்ரோ மீண்டும் முதலிடத்தில் உள்ளது. ஜனவரி முதல் ஜூலை வரை ஒரு நாளைக்கு சராசரியாக 4,114 பயணிகள் பயணம் செய்துள்ளார்கள். இந்த வரிசையில் ஆயிரம் விளக்கு மெட்ரோ அடுத்த இடத்தில் உள்ளது. இங்கு சராசரியாக ஒரு நாளைக்கு 3,229 பயணிகளும், கிண்டி மெட்ரோவில், ஒரு நாளைக்கு கூடுதலாக 3,001 பயணிகளும் பயணம் செய்தனர்.
நங்கநல்லூர்: சதவீத அதிகரிப்பின் அடிப்படையில், ஷெனாய் நகர் மெட்ரோ தான் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகபட்சமாக 45.1 சதவீத உயர்வை பதிவு செய்தது. நங்கநல்லூர் மெட்ரோ 42.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து 2-வது இடத்தைப் பிடித்தது. அரும்பாக்கம் மற்றும் ஆயிரம் விளக்கு பெருநகரங்கள் முறையே 40.6 சதவீதம் மற்றும் 40.4 சதவீத வளர்ச்சியை எட்டி உள்ளன.












Click it and Unblock the Notifications