வேளச்சேரி புதிய பாலம் ஆரம்பிக்கும் முன்பு இப்படியா.. மாநகராட்சிக்கு சென்னை மெட்ரோ அனுப்பிய கடிதம்
சென்னை: சென்னையில் பல ஐடி நிறுவனங்கள் வேளச்சேரியை சுற்றித்தான் இருக்கின்றன. இதனால் கிண்டி வேளச்சேரி சாலை தினமும் கடும் நெரிசலை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக குறுகிய சாலையாக உள்ள பீனிக்ஸ் மால் தொடங்கி கவர்னர் மாளிகை சந்திப்பு வரை மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. இந்நிலையில் மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் நடைபெற இருப்பதால் வேளச்சேரி பிரதான சாலையில் இருந்து குருநானக் கல்லூரி வரையில் புதிய பாலம் அமைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தக்கோரி மாநகராட்சிக்கு, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கடிதம் அனுப்பியிருக்கிறது.
சென்னை மாநகரத்தில் எல்லா முக்கியமான சாலைகளிலும் நெரிசல் மிக அதிகமாக இருக்கிறது. அதிலும் அண்ணா சாலை, பூந்தமல்லி சாலை, ஜிஎஸ்டி சாலை, ஆவடி சாலை, ஓஎம்ஆர் சாலை, ஈசிஆர், பூந்தமல்லி, கோடம்பாக்கம் சாலை, பள்ளிக்கரணை சாலை, ரேடியல் சாலை, நுங்கம்பாக்கம் சாலை என பெரிய சாலைகள் எல்லாம் நெரிசலில் திணறுகின்றன. இங்கு நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

இதில் ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள பள்ளிக்கரணை, தரமணி, பெருங்குடி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் பகுதிகளை அடைய மக்கள், ரேடியல் சாலை, அண்ணாசாலை, கிண்டி, வேளச்சேரி, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, அடையாறு, மத்திய கைலாஸ், தரமணி உள்ளிட்ட பகுதிகள் வழியாக அதிகமாக வருகிறார்கள். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். இதுபோன்ற போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சென்னை மாநகராட்சி பாலங்கள் துறை மூலம் புதிய பாலங்களை ஆங்காங்கே கட்டி வருகிறது. அந்த வகையில் கிண்டியில் இருந்து வேளச்சேரியில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேளச்சேரி பிரதான சாலையில் இருந்து குருநானக் கல்லூரி வரையில் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய பாலம் கட்டுவதற்கு சென்னை மாநகராட்சி திட்டமிட்டது.
இதற்கான டெண்டர் கடந்த ஜூலை மாதம் வெளியானது. இதன்படி பாலம் கிண்டி கவர்னர் மாளிகை அருகே உள்ள சர்தார் பட்டேல் சாலையில் தொடங்கி குருநானக் கல்லூரி வரையில் 100 அடி சாலையில் முடியும் வரையில் கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்த பாலத்தின் திட்ட மதிப்பு ரூ.310 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையே, டெண்டர் பணிகள் முடிவடைந்துவிட்டது. விரைவில் பாலம் அமைக்கும் பணி தொடங்க உள்ளது. ஆனால் தற்காலிமாக பால் அமைக்கும் பணியினை நிறுத்தி வைக்கக்கோரி சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தரப்பில் சென்னை மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், தாம்பரத்தில் இருந்து மேடவாக்கம், பள்ளிக்கரணை, காமாட்சி மருத்துவமனை வழியாக வேளச்சேரிக்கு மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்த வழித்தடம் 100 அடி சாலையில் குருநானக் கல்லூரி எதிரே ஐந்து பர்லாங் சாலை வழியாகவும் அமைய போகிறது. இதே வழியில் தான் மாநகராட்சி அமைக்கும் பாலமும் செல்கிறது. மெட்ரோ ரெயில் வழித்தடம் உயர்மட்ட பாதையில் அமைய இருப்பதால் அதற்கேற்றார் போல் பாலத்தை வடிவமைக்க வேண்டி உள்ளது. இதற்கான வடிவமைப்பு பணிகளை மெட்ரோ ரெயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
எனவே, வேளச்சேரி புதிய பாலம் அமைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்கக்கோரி மெட்ரோ ரெயில் நிறுவனம் தரப்பில் மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருகிறது. தாம்பரம் - வேளச்சேரி மெட்ரோ ரெயில் திட்டம் முடிவடைய நீண்டகாலம் எடுக்கும் என்பதால் வரைபடம் தயாரித்து விரைவில் ஒப்படைக்க மாநகராட்சி தரப்பில் கேட்கப்பட்டிருககிறது. மெட்ரோ ரெயில் நிறுவனம் தரப்பில் பணிகளை முடித்து ஒப்படைத்தால் ஏற்கனவே திட்டமிட்டபடி ஜனவரியில் பாலப் பணிகளை தொடங்குவோம். இல்லையென்றால் தாமதமாகும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.












Click it and Unblock the Notifications