சென்னை 2ஆவது விமான நிலையம் அமையும்.. பரந்தூர் வரை வருகிறது மெட்ரோ! பிரஷரே இல்லாமல் ஏர்போர்ட் போகலாம்
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் அடுத்தகட்ட ரயில் திட்டம் குறித்து முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
தலைநகர் சென்னையில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் பஸ், மின்சார ரயில், மெட்ரோ எனப் பல பொது போக்குவரத்துகள் உள்ளன. இவை மக்கள் தங்கள் பயணத்தை எளிமையாக்க உதவுகின்றன.
அதிலும் சமீப காலமாக மெட்ரோ ரயிலைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மெட்ரோ குறித்து புதிய அட்டகாசமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

சென்னை மெட்ரோ
சென்னை மெட்ரோவில் இப்போது இரு வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. முதற்கட்ட திட்டத்தின் கீழ் விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரை, சென்டரல் முதல் பரங்கிமலை வரை என மொத்தம் 54.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு இப்போது மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தினசரி சென்னை மெட்ரோவை சுமார் 2 லட்சம் பேர் பயன்படுத்துவதாகச் சமீபத்தில் தான் செய்திகள் வெளியானது.

புதிய வழித்தடங்கள்
இதனிடையே இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளுக்கான பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்ட மெட்ரோவில் மொத்தம் மூன்று வழித்தடங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. ரூ 61,843 கோடியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மாதவரம்-சிறுசேரி வரை 45 கிமீ தூரம் ஒரு வழித்தடமும் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26 கிமீ தூரம் ஒரு வழித்தடமும் மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரை 47 கிமீ தூரம் மற்றொரு வழித்தடம் என மொத்தம் மூன்று வழித்தடங்கள் முன்மொழியப்பட்டு உள்ளன.

பரந்தூர் விமான நிலையம்
இதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே சென்னையில் அமையவுள்ள இரண்டாம் விமான நிலையம் பரந்தூரில் அமையும் என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது. மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய முடியாத நிலையில், பரந்தூரில் புதிய விமான நிலையத்தை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இருப்பினும், மீனம்பாக்கம் விமான நிலையத்தின் சிறப்பே பொது போக்குவரத்து மூலமும் அங்குச் சென்றடைய முடியும் என்பது தான்.

அறிவிப்பு
இந்தச் சூழலில் நகருக்கு வெளியே 69 கிமீ தூரத்தில் பரந்தூரில் விமான நிலையத்தை அமைத்தால் அங்கு மக்களால் எளிதாகச் சென்றடைய முடியாது என்ற புகாரும் எழுந்து இருந்தது. இதனால் மக்கள் வெறு வழியின்றி கார் அல்லது டாக்ஸிக்களை பயன்படுத்த வேண்டி இருக்கும் என்றும் குறிப்பிட்டு இருந்தனர். இது நகருக்கு வெளியே போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் ஆபத்தும் உள்ளது.

பரந்தூர் வரை
இதனிடையே பரந்தூர் வரை மெட்ரோ ரயிலை நீட்டிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 4ஆம் வழித்தடம் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை முன்மொழியப்பட்டு உள்ள நிலையில், அதை புதிய விமான நிலையம் அமையவுள்ள பரந்தூர் வரை நீட்டிக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதாவது ஏற்கனவே முன்மொழியப்பட்ட திட்டத்தை காட்டிலும் கூடுதலாக 50 கிமீ இந்த வழித்தடத்தில் மெட்ரோ நீட்டிக்கப்பட உள்ளது.

கேளம்பாக்கம்
விமான நிலையத்திற்கு எளிதாகச் சென்று சேரும் வகையில் இந்த வழித்தடத்தில் மெட்ரோ அமைய உள்ள நிலையில், பரந்தூர் வரை குறைந்த அளவே ஸ்டேஷன்கள் இருக்கும் எனக் கூறப்பட்டு உள்ளது. அதேபோல மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரையிலான வழித்தடத்தைத் திருமங்கலம் மற்றும் மொகப்பேர் வழியாக ஆவடி வரையும் மாதவரம்-சிறுசேரி வழித்தடத்தை கேளம்பாக்கம் வரையும் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த கேளம்பாக்கத்தில் தான் புதிய பஸ் நிலையம் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications