வந்தாச்சு பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில்.. இந்த 2 ஸ்டேஷன்களில் ரயில்கள் நிற்காது.. கவனிங்க!
சென்னை: சென்னை பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான புதிய மெட்ரோ ரயில் சேவை வரும் அக்டோபர் 11 முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இந்த மெட்ரோ ரயில் 11 நிலையங்களில் நின்று செல்லும். சாலிகிராமம் மற்றும் ஆலப்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையங்களின் கட்டுமான பணிகள் நிறைவு பெறாததால் அந்த நிலையங்களில் ரயில்கள் நிற்காது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்ட்ரல் முதல் பரங்கிமலை, விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை என இரண்டு வழித்தடத்தில் 55 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில்களை இயக்கி வருகிறது.

118.1 கி.மீ தொலைவுக்கு இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாதவரம் முதல் சிப்காட் வரை (3-வது வழித்தடம்), கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை (4-வது வழித்தடம்), மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை (5-வது வழித்தடம்) புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக, கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரையிலான 4-வது வழித்தடத்தில் வடபழனி முதல் பூந்தமல்லி வரையிலான 14.64 கி.மீ வழித்தட மெட்ரோ பணிகள் முடிவடைந்து, ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதியை பெற்றது.
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைப்பதற்கான தேதியை இறுதி செய்யுமாறு மத்திய அரசுக்கு மெட்ரோ நிறுவனம் கோரிக்கை விடுத்திருந்தது. எனினும், சட்டமன்றத் தேர்தல், புதிய அரசு பதவியேற்பு உள்ளிட்ட காரணங்களால் இந்த வழித்தடத்தின் தொடக்க தேதி தொடர்ந்து தள்ளிப் போய் கொண்டே இருந்தது.
இந்நிலையில், வரும் 11 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ வழித்தடத்தை துவக்கி வைக்க உள்ளார். ஆரம்பத்தில் 11 ரயில் நிலையங்களுடன் இந்த மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என்றும், பின்னர் கூடுதலாக 6 ரயில் நிலையங்கள் பயன்பாட்டுக்கு வரும் எனவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பூந்தமல்லி - வடபழனி வழித்தடத்தில் முதல்கட்டமாக 10 நிமிட இடைவெளியில் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் சேவைக்கான கட்டண விவரம் வெளியாகியுள்ளது. குறைந்தபட்சம் ரூ. 10 முதல் அதிகபடியாக ரூ. 40 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பூந்தமல்லி புறவழிச் சாலை மெட்ரோ ரயில் நிலையம் - வடபழனி இடையே 40 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ முதல் போரூர் சந்திப்பு இடையே 30 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போரூர் சந்திப்பு - வடபழனி இடையே 30 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பூந்தமல்லி முதல் காட்டுப்பாக்கம் வரை செல்ல 20 ரூபாயும், பூந்தமல்லி மெட்ரோ ரயில் நிலையம் முதல் பூந்தமல்லி பேருந்து நிலையம் வரை செல்ல 10 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த மெட்ரோ ரயில், பூந்தமல்லி பைபாஸ், பூந்தமல்லி, முல்லைத்தோட்டம், கரையான்சாவடி, குமணன்சாவடி, காட்டுப்பாக்கம், ஐயப்பன்தாங்கல், தெள்ளியாரகரம், போரூர் பைபாஸ் மற்றும் போரூர் சந்திப்பு, வடபழனி ஆகிய 11 நிலையங்களில் நின்று செல்லும். சாலிகிராமம் மற்றும் ஆலப்பாக்கம் ரயில் நிலையங்களின் கட்டுமான பணிகள் நிறைவு பெறாததால் அந்த நிலையங்களில் ரயில்கள் நிற்காது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
