வடபழனி-போரூர் இடையே ஜனவரியிலேயே மெட்ரோ ரயில் ஓடும்.. ஆனால் அதில் ஒரு பெரிய ட்விஸ்ட்
சென்னை: சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ், வடபழனி முதல் பூந்தமல்லி பணிமனை வரையிலான 6 கி.மீ தூரப் பணிகளை விரைந்து முடிக்க சென்னை மெட்ரோ நிர்வாகம் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இதற்காக ஆட்கள் மற்றும் இயந்திரங்களை இறங்கி தீவிரமாக வேலை செய்து வருகிறது. இது குறித்து சென்னை மெட்ரோ இயக்குநர் சித்திக் கூறுகையில், வரும் ஜனவரி பாதியில், வடபழனி முதல் பூந்தமல்லி வரை வழித்தடத்தில் சோதனை ஓட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில், பூந்தமல்லி முதல் சென்ன கலங்கரை விளக்கம் வரை ஒரு பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் முதற்கட்டமாக பூந்தமல்லி போரூர் இடையே சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. விரைவில் மெட்ரோ ரயில் ஒடப்போகிறது. இன்னொரு புறம் போரூர் மற்றும் வடபழனி இடையேயும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த பாதையை விரைவில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர சென்னை மெட்ரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக பூந்தமல், வடபழனி இடையே முழுபாதை நெடுகிலும் சுமார் 4,000 தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். சுமார் 3,000 தொழிலாளர்கள் மேம்பால மற்றும் தளத் தகடு கட்டுமானப் பணிகளிலும், 600 பேர் தண்டவாளம் அமைக்கும் பணிகளிலும், மீதமுள்ள 400 பேர் இழுவை மற்றும் சிக்னல் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறர்கள். வரும் ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரி மாதத்திற்குள் பூந்தமல்லி வடபழனி இடையே மெட்ரோ ரயில் சேவையை தொடங்க சென்னை மெட்ரோ நிறுவனம் இலக்கு நிர்ணயித்து வேலை செய்து வருகிறது. இந்த தகவலை மெட்ரோ இயக்குனர் சித்திக் கூறினார்.
இதுபற்றி சித்திக் ஐஏஎஸ் மேலும் கூறுகையில், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பணிகளை முடிப்பதற்காக சென்னை மெட்ரோ வழக்கமாகப் பயன்படுத்தப்படும் எட்டு கிரேன்களுக்குப் பதிலாக 57 கிரேன்களைப் பணியில் ஈடுபடுத்தி உள்ளது.சோதனை ஓட்டங்களுக்கு முன்பே பணிகளை முடிக்க வேண்டும் என்ற இலக்குடன் உள்ளோம். எனவே பணிகளை ஒருஇடம் பாக்கி இல்லாமல் விரைவாக செய்து வருகிறோம்.
இதற்காக பணிகளை திட்டமிட்டு, பிரித்து ஒதுக்கி, தினசரி மதிப்பாய்வு செய்கிறோம். தண்டவாளம் அமைக்கும் பணிகளைக் கையாள ஏழு பிரத்யேகக் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. 3 மற்றும் 5 ஆம் வழித்தடங்களில் இருந்து ஆட்கள் நான்காம் வழித்தடத்திற்கு மாற்றப்பட்டு, பணிகள் விரைவுபடுத்தப்பட்டிருக்கிறது. சராசரியாக, தினமும் சுமார் 300 மீட்டர் தண்டவாளம் அமைக்கப்படுகிறது என்றார்.
சென்னை மெட்ரோ திட்ட இயக்கனர் டி.அர்சசன் கூறும் போது, வடபழனி பூந்தமல்லி இடையேயான பாதையில் பொறியியல் சிக்கல்கள் இருந்தபோதிலும், கடந்த நான்கு மாதங்களில் கணிசமான அளவு பணிகள் முடிக்கப்பட்டிருக்கிறது. மெட்ரோ ரயில் செல்லும் மேம்பாலத்திற்கான தளத் தகடுகள் மற்றும் ஐ-வடிவ விட்டங்களை வடிவமைப்பது தொழில்நுட்ப ரீதியாக மிகவும் சவாலானது . ஏனெனில், இரண்டு கனமான மெட்ரோ ரயில்கள் பாலத்தில் செல்லும் போது பாதுகாப்பாக இயங்க வேண்டும்.
இப்பாதை 'டபுள் டெக்கர்' முறையில் அமைவதால் தண்டவாளம் அமைப்பதற்கு அசாதாரணமான துல்லியம், அதிர்வுக் கட்டுப்பாடு, பாதுகாப்பு மேற்பார்வை மற்றும் தளவாட ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது. இந்த அளவிலான தீவிரமான பணி வேறு எங்கும் அரிதாகவே மேற்கொள்ளப்படுகிறது," என்று கூறினார்.
சித்திக் மெட்ரோ ரயில் பயணம் பற்றி கூறுகையில், ஆரம்பத்தில், வடபழனி மற்றும் போரூர் இடையே இடைப்பட்ட ரயில் நிலையங்கள் இருக்காது. இந்தப் பாதையில் உள்ள நிலையங்கள் ஜூன் மாதத்திற்குள் தயாராகிவிடும் அதுவரை, வடபழனியில் ஏறும் பயணிகள் போரூரில் தான் முதல் நிறுத்தத்தைக் காண்பார்கள் . மேலும், வடபழனி நிலையத்தில் அடுத்த 10 நாட்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் தெரியும் என்றார்.
சென்னை மெட்ரோ முதலில் இரண்டாம் கட்டத்தின் முதல் பகுதியான 9.5 கி.மீ நீளமுள்ள பூந்தமல்லி-போரூர் பாதையை டிசம்பரில் திறக்கத் திட்டமிட்டிருந்தது. ரயில்வே வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பிடமிருந்து வேகச் சான்றிதழ் நிலுவையில் இருந்தது. இதனால் அந்தத் திட்டம் தாமதமானது. தற்போது ஒரு தற்காலிகச் சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. அந்தப் பாதையில் பணிகள் 99% நிறைவடைந்துவிட்டது. லேசான வளைவுகளைக் கொண்ட வடபழனி-போரூர் பகுதிக்கு, ரயில்வே வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பிடமிருந்து அனுமதி பெறுவது ஒப்பீட்டளவில் எளிதாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications