சென்னையில் சொந்த வீடு உள்ளதா.. குறையுதே.. உடனே செஞ்சுடுங்க.. சென்னை மாநகராட்சி குட்நியூஸ்
சென்னை: சென்னையில் குடிநீர், கழிவு நீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை தாமதமாக செலுத்துவோருக்கான அபராத தொகை குறைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், " தற்போது பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை காலதாமதாக செலுத்தும் நுகர்வோர்களுக்கு மாதத்திற்கு 1.15 சதவீதம் என்ற விகிதத்தில் மேல் வரி (surcharge) வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நுகர்வோர்களின் நலனை கருத்தில் கொண்டு தற்போது வசூலிக்கப்பட்டு வரும் மேல் வரி 1.15% இருந்து 1 சதவீதமாக ஜுலை 1 முதல் குறைத்திட சென்னை குடிநீர் வாரியம் தீர்மானித்துள்ளது.
எனவே பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள் (மண்டலம் 1 முதல் 15 வஐரு) உள்ள நுகர்வோர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள காலக் கெடுவிற்குள் குடிநீர்/ கழிவு நீரகற்று வரி மற்றும் கட்டணங்களை செலுத்தி மேல் வரியினை தவிர்த்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் நுகர்வோர்கள் சென்னை குடிநீர் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை இணையதளம் வாயிலாக https://cmwssb.tn.gov.in/ என்ற வலைதளத்தை பயன்படுத்தி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட்பேங்கிங் மூலம் செலுத்தலாம்.
மேலும் பகுதி அலுவலகங்கள் பணிமனை அலுவலகங்களில் வரையோலை, காசோலை மற்றும் ரொக்கமாகவும், தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்களில் காசோலை மற்றும் வரையோலையாகவும் செலுத்தலாம்.
மேலும் upi, QR குறியீடு மற்றும் pos போன்ற பிற கட்டண முறைகளையும் பயன்படுத்தி நுகர்வோர்கள் தங்களின் குடிநீர் மற்றும கழிவு நீரகரற்று வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை செலுத்தலாம்.
எனவே நுகர்வோர்கள் சென்னை குடிநீர் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை உரிய காலத்திற்குள் செலுத்த வாரியத்தின் வளர்ச்சி பணிகளுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது" இவ்வாறு சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை மாநகராட்சி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியட்ட அறிவிப்பில், திருத்தியமைக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு திட்டத்தின் மூலம், பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகளுக்கான கட்டணங்களை தவணை முறையில் செலுத்தலாம் என்று என்று கூறியிருந்தது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டிருந்த அறிவிப்பில்," சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்களான அழைத்தால் இணைப்பு (மையப் பகுதிகளுக்கும்-Core Areas) மற்றும் இல்லந்தோறும் இணைப்பு (விரிவாக்கப்பட்ட பகுதிகளுக்கும்-Added Areas) கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், குடிநீர் இணைப்பு மற்றும் கழிவுநீர் இணைப்புகளை எளிதில் பொதுமக்கள் பெறக்கூடிய வகையில் மாற்றியமைக்கப்பட்டு புதிய திருத்தப்பட்ட குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு திட்டத்துக்கு நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையால் அரசாணை அண்மையில் வெளியிடப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம், பொதுமக்கள் தங்கள் வீட்டிற்கு குடிநீர், கழிவுநீர் இணைப்பைப் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட பகுதி பணிமனை அலுவலகங்களில் நேரிடையாகவும், தொலைபேசி எண்.(044-45674567) மற்றும் இணையதளம் (https://cmwssb.tn.gov.in) மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். உரிய ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர் ஆவணங்கள் உரிமையாளரிடம் சரிபார்க்கப்பட்டு குடிநீர்/கழிவுநீர் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று சட்டம், 1978-ன்படி விண்ணப்பதாரரின் ஒப்புதல் பெற்று நுகர்வோருக்கு குடிநீர்/கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்படும்.
குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகளுக்கான விண்ணப்பங்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பின்னர் உரிய பரிசீலனை மேற்கொள்ளப்படும். அதன் பின்னர், இணைப்பிற்குரிய முழுத் தொகையையோ அல்லது முதல் தவணைத் தொகையையோ செலுத்தியவுடன் இணைப்புகள் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள (BPL) பிரிவினருக்கு இணைப்புக் கட்டணமாக ரூ.100 மட்டும் வசூலிக்கப்படும். இவர்களுக்கு வழங்கப்படும் குடிநீர்/கழிவுநீர் இணைப்புகளுக்கான கட்டணங்கள் (சாலை வெட்டு மறுசீரமைப்புக்கான கட்டணங்கள் உள்பட) சென்னை குடிநீர் வாரியத்தால் ஏற்றுக் கொள்ளப்படும்.
தரை தளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய (G+1) மாடி கட்டிடங்கள் (குடியிருப்புகள் மற்றும் பகுதி வணிக கட்டிடங்கள்) 1800 சதுர அடி வரை இணைப்புக் கட்டணங்கள் மற்றும் பிற கட்டணங்கள் (உள்கட்டமைப்பு மேம்பாட்டு கட்டணங்கள் உள்பட) அனைத்து கட்டணங்களும் ஒரே தவணையாகவோ அல்லது 10 தவணைகளில் (ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஐந்து ஆண்டுகளில்) செலுத்தலாம்.
தரை தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் கூடிய (G+2) மாடி கட்டிடங்கள் (குடியிருப்புகள் மற்றும் பகுதி வணிக கட்டிடங்கள்) மற்றும் வாகன நிறுத்துமிடத்துடன் கூடிய 3 மாடி கட்டிடங்கள் (Stilt +3) 2700 சதுர அடி வரை குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு பெறுவதற்கு இணைப்புக் கட்டணங்கள் மற்றும் பிற கட்டணங்கள் (உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் கட்டணங்கள் உள்பட) அனைத்து கட்டணங்களையும் ஒரே தவணையாகவோ அல்லது மூன்று தவணைகளில் (ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, 18 மாதங்களில்) செலுத்தலாம்.
பிற வகையான கட்டிட உரிமையாளர்கள், குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு பெறவிருக்கும் கட்டிடத்தின் கட்டுமானப் பணி நிறைவு பெற்றதற்கான சான்றிதழை சமர்ப்பித்து கழிவுநீர் மற்றும் குடிநீர் இணைப்பிற்கான முழு கட்டணத் தொகையினை ஒரே தவணையாக செலுத்தி இணைப்பை பெற்றுக் கொள்ளலாம்.
குடிநீர் வழங்கல்/கழிவு நீரகற்றல் இணைப்புகள் வழங்குவதற்கான அமைப்பு தயாரானதும், சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் இணைப்புகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 24 மணி நேரத்திற்குள் சாலைகள் சீரமைக்கப்படும். மேலும், சாலை மறுசீரமைப்பு கட்டணங்களையும் பொதுமக்கள் தவணை முறையில் செலுத்தலாம். குடிநீர்/கழிவுநீர் இணைப்புகளுக்கான கட்டமைப்புகள் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள இடங்களில், வீட்டின் சுற்றுச்சுவர் வரையிலான சாலை வெட்டு சீரமைப்பு கட்டணங்களை செலுத்த வேண்டியதில்லை.
குடிநீர்/கழிவுநீர் இணைப்புக் கட்டணங்கள், கட்டிடம் கட்டப்பட்ட மொத்த பரப்பளவின் அடிப்படையில் வசூலிக்கப்படும். குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புக் கட்டணம்/வைப்புத் தொகை ஆகியவை ஏற்கெனவே உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்தப்பட்டிருந்தால், இணைப்பு வழங்கும்போது அந்த தொகை ஈடு செய்யப்படும்.
விண்ணப்பதாரர்கள் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புக் கட்டணங்களை இணைய வழியிலான கட்டண நுழைவாயிலைப் (online Gate Way) பயன்படுத்தியோ, ரொக்கமாகவோ அல்லது வங்கி வரைவோலை (Demand Draft) மூலமாகவோ அனைத்து பகுதி அலுவலகங்கள்/பணிமனை அலுவலகங்களில் அலுவலக வேலை நாட்களில் செலுத்தலாம்.
பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பழைய உள்ளாட்சி அமைப்புகளுக்கு குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புப் பெறுவதற்கான கட்டணங்களை ஏற்கெனவே செலுத்தியிருந்தால், புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகளில் பழைய PVC குடிநீர் குழாயை மாற்றி புதிய DI குழாய்கள் பதித்து குடிநீர் இணைப்புகள் எவ்வித கட்டணமுமின்றி வழங்கப்படும்.
இதன் மூலம் பொதுமக்கள் புதிய திருத்தப்பட்ட குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு திட்டத்தின் மூலம் எளிய முறையில் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பினைப் பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதுதொடர்பான விவரங்களுக்கு 044-4567 4567 என்ற தொலைபேசி எண்ணிலும், https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்" என்று சென்னை மாநகராட்சி அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications