பிழைப்பு தேடி தமிழ்நாடு வந்த சிறுவன்..காலி ரயில் பெட்டியில் சீரழித்த கயவர்கள்! துடித்து பலியான சோகம்!
சென்னை: சென்னை சென்ட்ரல் நிலையத்தில் கடந்த ஆண்டு மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நான்கு மாத சிகிச்சை பலனளிக்காமல் அந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வேலை தேடி மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த தனது குடும்பத்துடன் சிறுவன் வந்துள்ளான். கடந்த நவம்பர் மாதம் 27ஆம் தேதி அந்த சிறுவன் ரயில் நிலையம் அருகே ஒரு டீக்கடைக்கு டீ குடிக்க சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர் அந்த சிறுவனை ஏமாற்றி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த காலி ரயில் பெட்டிக்குள் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அந்தச் சிறுவனை இருவரும் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

வாய் மற்றும் ஆசனவாயில் கடுமையான காயங்களுடன் இருந்த அந்த சிறுவன் ரயில்வே போலீசாரால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அந்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 4 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த சிறுவனின் உடல்நிலை தொடர்ந்து மோசம் அடைந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அந்த சிறுவன் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவன் சிகிச்சை பெற்ற போது அவனது வாக்குமூலம் மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் குழந்தைகள் உதவி மைய அதிகாரிகள் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டது. தற்போது இந்த சிறுவன் உயரிழந்த நிலையில் பாலியல் வன்கொடுமை வழக்கோடு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் போக்சோ சட்டம், சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது சிறுவன் உயிரிழந்த நிலையில் குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அதே நேரத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சென்னை சென்ட்ரல் போன்ற முக்கிய ரயில் நிலையத்திலேயே இது போன்ற ஒரு சம்பவம் நடந்திருப்பது பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாகி உள்ளது.
எனவே பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதே நேரத்தில் குற்றவாளிகளை விரைவில் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications