பேருந்து குறிப்பேடு ஆங்கிலத்தில் மாறிடுச்சா? எழுந்த கண்டனம்! சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மறுப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பேருந்து குறிப்பேடு தாள்கள் ஆங்கிலத்தில் மாற்றப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் மறுப்பு தெரிவித்துள்ளது. பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் எம்.டி.சி அந்த தகவலை மறுத்துள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மூலம், நாள்தோறும் 600க்கும் மேற்பட்ட வழித்தடங்களில், 3,200க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பணிமனையில் இருந்து பேருந்துகள் தினமும் புறப்படும்போது அந்த பணிமனை கிளை மேலாளர் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு வாகன குறிப்பேடு என்ற படிவத்தை வழங்குவார்.

Chennai bus transport

தமிழ் மொழியில் வழங்கப்படும் இந்த படிவத்தில் பேருந்து வழித்தட எண், புறப்பட்ட நேரம், வந்தடையும் நேரம், ஓட்டுநர், நடத்துநர் பெயர்கள் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும். அதுபோல் வழியில் ஏதாவது விபத்து ஏற்பட்டாலோ அல்லது பேருந்தில் ஏதேனும் குறைகள் இருந்தாலோ நடத்துநர் அந்த படிவத்தில் குறிப்பிட்டு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

பல ஆண்டுகளாக தமிழ் மொழியில் வழங்கப்பட்ட இந்த படிவம் தற்போது தமிழ் மொழிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசு ஆங்கில மொழியை திணிக்கிறதா என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Chennai bus transport

பேருந்துகளின் குறிப்பேடு மாற்றப்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், "சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகங்களின் மூலம் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளின் செயல்பாடுகள் குறித்த குறிப்புகளை பதிவு செய்வதற்கான வண்டி குறிப்பேடு (Vehicle Log Sheet) இதுவரை தமிழில் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், அதை இப்போது ஆங்கிலத்தில் மாற்றியுள்ளனர். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் 1956 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தின்படி அரசின் ஆவணங்கள், படிவங்கள் அனைத்தும் தமிழில் தான் இருக்க வேண்டும். பேருந்துகளுக்கான படிவங்களை ஆங்கிலத்தில் மாற்றுவது தமிழுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும். தமிழ்நாட்டில் அன்னைத் தமிழுக்கு இடமளிக்க மறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

Chennai bus transport

அதுமட்டுமின்றி, ஓட்டுனர்களும், நடத்துனர்களும் பத்தாம் வகுப்புக் கல்வித் தகுதியில் பணிக்கு சேர்ந்தவர்கள். அவர்களால் ஆங்கிலத்தில் எழுத முடியாது. இவை அனைத்துக்கும் மேலாக எந்த மொழியையும் திணிக்கக் கூடாது. எனவே, பேருந்து குறிப்பேட்டை ஏற்கனவே நடைமுறையில் இருந்தவாறு தமிழுக்கு மாற்ற வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில், "அரசுப் பேருந்துகளின் குறிப்பேடு பதிவை தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மாற்றுவதா? தாய்மொழி தமிழை புறக்கணிக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.

சென்னைப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் இயங்கும் அரசுப் பேருந்துகளின் வழித்தட எண், புறப்படும் நேரம், பழுதுகள் மற்றும் குறைபாடுகள் உள்ளிட்டவற்றை குறிப்பிடும் வாகனக் குறிப்பேடு படிவம் தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மாற்றப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

பல ஆண்டுகளாக தமிழில் இருந்த வாகனக் குறிப்பேடு எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீரென ஆங்கிலத்திற்கு மாற்றப்பட்டிருப்பதால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு கல்வித்தகுதியில் பணிக்குச் சேர்ந்த ஓட்டுநர்களும், நடத்துனர்களும் வாகனப் பழுது மற்றும் குறைபாடு விவரங்களை எழுதுவதில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்திக்கு எதிராக மேலும் ஒரு மொழிப்போரை சந்திக்கக் தயாராக இருப்பதாக வீரவசனம் பேசும் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள், தன் சொந்த மாநிலமான தமிழ்நாட்டிலேயே தாய்மொழி தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் ?

அரசுப்போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயன்படுத்தப்படும் வாகனக் குறிப்பேடுகளை கூட தமிழில் வழங்க முடியாத திமுக அரசும் அதன் முதலமைச்சர் அவர்களும், இந்திக்கு எதிராக தமிழ் காக்கும் அறப்போரில் பங்கேற்க பொதுமக்களை அழைப்பது முழுக்க முழுக்க ஏமாற்றும் செயலாகும்.

எனவே, ஏற்கனவே இருந்த நடைமுறையைப் பின்பற்றி அரசுப்பேருந்துகளின் ஓட்டுநர்களுக்கும், நடத்துனர்களுக்கும் வழங்கப்படும் வாகன குறிப்பேடு படிவத்தை தமிழில் மட்டுமே வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என போக்குவரத்துத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாநகர் போக்குவரத்துக் கழகம், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) நிதியுதவியுடன் கூடிய சென்னை நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு (CITS) திட்டத்தின் கீழ் தற்போது பேருந்து மேலாண்மை அமைப்பை செயல்படுத்தி வருகிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, டிப்போ மேலாண்மை அமைப்பு (DMS) மூலம் பேருந்து குறிப்பேடு தாள்கள் தானாக உருவாக்கப்படுகின்றன.

ஆரம்ப மென்பொருள் மேம்பாட்டு கட்டத்தில், பேருந்து குறிப்பேடு தாள்கள் ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டன. இருப்பினும் செயல்படுத்தலின்போது, இந்த பேருந்து குறிப்பேடு தாள்கள் முழுமையாக தமிழில் மாற்றப்பட்டுள்ளது. மேலும் அனைத்து பணிமனைகளிலும் பேருந்து குறிப்பேடு தமிழில் மட்டுமே உருவாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
"மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து குறிப்பேடு தாள்களை ஆங்கிலத்திற்கு மாற்றியுள்ளது" என்ற செய்தி தவறானது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+