2 டிரைவர்களின் அலட்சியத்தால் ஈசிஆரில் பறிபோன உயிர்.. சாட்டையை சுழற்றுமா சென்னை டிராபிக் போலீஸ்?
சென்னை: சென்னை திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையில் இன்று அதிகாலை இரண்டு டிரைவர்களின் அலட்சியம் ஒரு பெண்ணின் உயிரையே பறித்திருக்கிறது.. இந்த சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது ஆகும்.. சென்னையில் இதுபோன்ற போக்குவரத்து விதிமீறல்களை தடுக்க போக்குவரத்து சட்டங்கள் கடுமையாக அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுகிறது.
சென்னை திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையில் ஆர்டிஓ அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகம் எதிரே இன்று அதிகாலை சிவகாமி என்ற தூய்மை பணியாளர் சாலையை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.. அப்போது அசுர வேகத்தில் வந்த கார் ஓட்டுநர் திடீரென சிவகாமி மீது மோதினார். இதில் தூக்கி வீசப்பட்ட அவர் எதிர் திசையில் வேகமாக வந்த லாரியில் சிக்கி கண் இமைக்கும் நேரத்தில் உயிரிழந்தார்.

காரில் வந்தவர் தான் கவனம் இல்லாமல் வந்து பயங்கரமாக மோதி தூய்மை பணியாளர் சிவகாமியை தூக்கி வீசினார் என்றால், எதிரே வந்த லாரி டிரைவர் எந்த சலனும் இல்லாமல் வேகமாக வந்து மோதி அவர் மீது ஏற்றி உள்ளார். இரண்டு டிரைவர்களின் கவனக்குறைவு, அலட்சியம் வேகம் காரணமாக தூய்மை பணியாளர் சிவகாமி பரிதாபமாக இறந்து போயிருக்கிறார்.. மிகவும் துரதிஷ்டவசமான இந்த சம்பவம் போல், சென்னையில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன..
சென்னையில் சாலையோரத்தில் நடந்து செல்வதும் பேருந்து நிலையங்களில் நிற்பது பல நேரங்களில் ஆபத்தான விஷயமாக உள்ளது. ஏனெனில் சாலைகள் நடப்பதற்கு இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் வாகன பெருக்கம் சென்னையில் இருக்கிறது.. சென்னையில் உள்ள சில பெரிய சிக்னல்களில் பொதுமக்களால் சாலையை கடப்பது என்பது உயிரை கையில் படித்துக் கொண்டு தான் போக வேண்டிய நிலை உள்ளது..
அதிகாலையில் கார்களில் செல்வோர் சென்னை நகருக்குள் அதிவேகத்தில் செல்கிறார்கள். இந்த வேகம் காரணமாக அவர்களுக்கு சாலையோரம் சுத்தம் செய்வோர், நடந்து செல்வோரை கவனிக்காமல் மோதும் அபாயம் அதிகமாக உள்ளது. சென்னையில் தற்போது குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் சென்றால் அபராதம் என்ற விதி அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.. இந்த விதியின்படி காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னையில் பீக் அவர்ஸில் கனரக வாகனங்கள் வரக்கூடாது என்ற ரூல்ஸ் உள்ளது. இந்த விதிகளை பெரும்பாலான கனரக வாகனங்கள் மதிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.. இந்த விஷயத்தில் போலீசார் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.. அதேபோல் அசுர வேகத்தில் செல்லும் இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் தயவு தாட்சணை இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அரசு பேருந்துகள் நிற்க தனியாக பஸ் வே, சிக்னல்களை குறைக்க யூடர்கன்கள் அமைப்பது போன்ற சென்னை போலீசாரின் நடவடிக்கைகளை பாராட்டும் பொதுமக்கள், சிகப்பு சிக்னல் போட்ட பின்னர் செல்லும் வாகனங்கள் மீது கண்டிப்பாக அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். போக்குவரத்து விதிமீறல்கள், அலட்சியங்களை தடுக்க சட்டங்களை போக்குவரத்து போலீசார் கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும், அதுவரையில் விபத்துகள் தொடரத்தான் செய்யும் என்றும் மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications