பனையூரில் பரபரப்பு.. விஜய்யின் மாநாட்டுக்கு 17 கண்டிஷனுடன் "பச்சைக்காடி".. சென்னையில் தவெக ஆலோசனை
சென்னை: தமிழக வெற்றிக் கழக மாநாடு அக்டோபர் 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடக்க உள்ள நிலையில், அது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று பனையூரில் நடக்கிறது. இதனால் விஜய் கட்சியினர் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு அக்டோபர் 27 ம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெறுவதாக கட்சி தலைவர் விஜய் அறிவித்திருந்தார்...

எனவே, இந்த மாநாடு நடத்துவதற்கு காவல்துறை சார்பில் அனுமதி, பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கட்சி சார்பில் கோரப்பட்டிருந்தது..
அனுமதி தந்த காவல்துறை: இந்நிலையில், வருகிற அக்டோபர் 27ம் தேதி கட்சியின் முதல் மாநாட்டை நடத்துவதற்கு விக்கிரவாண்டி காவல் துணை கண்காணிப்பாளர் நந்தகுமார் அனுமதி அளித்துள்ளார். அததுடன், 17 நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் தற்போது உத்தரவிட்டுள்ளார்.
மாநாடு நடைபெறும் நாளன்று போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது, வாகனங்கள் பார்க்கிங் செய்ய அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே நிறுத்த வேண்டும் , சாலைகளின் ஓரத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தக் கூடாது , கட்டாயம் கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்களுக்கு தடுப்புடன் கூடிய இருக்கை வசதிகள், மருத்துவ வசதியுடன்கூடிய ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள், மாநாட்டு திடலில் நிறுத்த வேண்டும் என்பது உட்பட 17 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
கட்டாயம்: தற்போது மாநாட்டுக்கு அனுமதி அளித்திருப்பதே விஜய் கட்சியினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.. இந்த மாநாட்டுக்கு எப்படியும், தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 5 லட்சம் பேரை திரட்ட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் முதலாக நடத்தப்போகும் மாநாடு என்பதால், அதை சீரிய முறையில் செயல்படுத்த வேண்டும் என்ற கட்டாயமும் விஜய் தரப்புக்கு ஏற்பட்டுள்ளது.
அதனால்தான், மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது தொடர்பாக தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடக்கிறது.. சென்னை அடுத்த பனையூரில் நடக்க உள்ள இந்த கூட்டத்திற்கு கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமை தாங்குகிறார். மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். இந்த கூட்டத்தில் மாநாடு தொடர்பான கருத்துக்கள், ஆலோசனைகள் நடக்க உள்ளதாக தெரிகிறது.
அடையாள அட்டைகள்: அதுமட்டுமல்ல, மாநாட்டுக்கு ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து எவ்வளவு பேரை அழைத்து வர வேண்டும் என்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும், போலீசார் விதித்துள்ள 17 விதிமுறைகளை பின்பற்றி நடப்பது, ஒவ்வொருவருக்கும் அடையாள அட்டைகளை வழங்குவது குறித்தும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications