சென்னை பரங்கிமலையில் பல கோடி ரூபாய் அரசு நிலம் தனியாருக்கு பத்திரப்பதிவு.. சார் பதிவாளர் சஸ்பெண்ட்
சென்னை: நூற்றுக்கணக்கான கோடி பரங்கிமலை அரசு நிலங்களை தனியாருக்கு சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்த புகாரில் குற்றம் சாட்டப்பட்ட சார்பதிவாளர் உமா பத்திரப்பதிவு துறையால் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இந்த அரசு நிலங்களை மீண்டும் அரசு மீட்கும் வரை, தப்பு செய்தவர்கள் மீது முழு நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம் என அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் அறப்போர் இயக்கம் வெளியிட்ட வீடியோ பதிவில், "தமிழ்நாட்டில் அத்திப்பட்டி கிராமம் மேப்பை விட்டே காணாமல் போனதாக சிட்டிசன் படத்தில் பார்த்திருப்பீர்கள்.. அதே மாதிரி சென்னையில் ஒரு அத்திப்பட்டி இருக்கிறது. சென்னையின் அத்திப்பட்டி பரங்கிமலை கிராமத்தை காணவில்லை.
தமிழக வருவாய் துறையினர், பரங்கி மலை கிராமத்தில் உள்ள நிலங்கள் சர்வே நம்பர் படி யார் பெயரில் பட்டா உள்ளது என்கிற முழுமையாக தகவலை இணையதளத்தில் இருந்தே தூக்கிவிட்டனர். நீங்கள் வருவாய் துறையின் இணையதளத்தில் அனைத்து கிராமங்களின் பட்டாவையும் இணையதளத்தில் பார்க்க முடியும். ஆனால் நீங்கள் பரங்கிமலை கிராமத்தை மட்டும் பார்க்க முடியாது. ஏன் பரங்கிமலையை அத்திப்பட்டியை மாற்றினார்கள் என்றால், இங்கு நிறைய அரசு நிலங்கள் உள்ளன. சுதந்திரத்திற்கு முன்பு பிரிட்டீஸ் அரசு 50 வருடம், 100 வருடம் லீஸ் கொடுத்த நிறைய இடங்கள் எல்லாம் இதில் இருக்கிறது. இந்த இடங்கள் எல்லாம் அரசாங்கத்திற்கு வர வேண்டிய நிலங்கள் ஆகும்.
அந்த நிலங்களை எல்லாம் ஆட்டையை போடுவதற்காக, ஏற்கனவே நிறைய பேர் ஆட்டையை போட்டுவிட்டார்கள். இது வெளியில் தெரியக்கூடாது. எது எதெல்லாம் அரசாங்க நிலம் என்பது வெளியே தெரியக்கூடாது என்பதற்காக வருவாய்துறை மக்களிடம் இருந்து முழுமையாக மறைத்துள்ளது. அதற்காக சென்னை பரங்கிமலை கிராமத்தில் எந்த நிலம் யார் பெயரில் பட்டா இருக்கிறது என்ற விவரங்களை வருவாய்த்துறை இணையதளத்தில் இருந்து அகற்றி உள்ளது.
பரங்கிமலை கிராமத்தில் பிரிட்டீஸ் அரசு லீசுக்கு கொடுத்த பல இடங்கள் மீண்டும் அரசுக்கு வந்து சேரவில்லை. அந்த அரசு நிலங்களின் சர்வே நம்பர்களை குறிப்பிட்டு இதை யாருக்கும் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என 2015ம் ஆண்டு ஆலந்தூர் தாசில்தார் பத்திரப்பதிவு துறைக்கு கடிதம் எழுதினார். ஆனால் அதன் பின்னரும் பத்திரப்பதிவுகள் நடந்துள்ளன. ஆனால் உத்தரவிற்கு பின்னர் இந்த பதிவுகளை செய்த சப் ரிஜிஸ்தாரர் உமா மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்று அறப்போர் இயக்கம் கூறியிருந்தது.
இதனிடையே நூற்றுக்கணக்கான கோடி பரங்கிமலை அரசு நிலங்களை தனியாருக்கு சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்ததாக புகாரில் குற்றம் சாட்டப்பட்ட சார்பதிவாளர் உமா பத்திரப்பதிவு துறையால் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக பதிவிட்டுள்ள அறப்போர் இயக்கம், "அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்தை தான் வேதாந்தா என்ற நிறுவனம் SBI வங்கிக்கு மாதம் 5 லட்சம் வாடகைக்கு லீஸ் விட்டுள்ளது. இந்த நிலம் அரசுக்கு சொந்தமானது என்று வருவாய்த்துறை ஒரு வருடம் முன்பாக அந்த இடத்தில் நோட்டீஸ் வைத்துள்ளது. ஆனால் ஆக்கிரமிப்பு செய்தவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அந்த நிலத்தை அரசாங்கம் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளவும் இல்லை. வங்கி அங்கேயே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த லீஸ் பத்திரப்பதிவு செய்து கொடுத்த சார் பதிவாளர் உமாவையும் காப்பாற்றி ஓய்வு பெற வைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் அறப்போர் இயக்கம் இந்த விஷயத்தை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியதால் தடுக்கப்பட்டு தற்பொழுது உமா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் சார் பதிவாளர் உமாவை இந்த மோசடி பத்திரப்பதிவு செய்து கொடுக்க சொல்லிய அந்த பெரிய கை யார்? அரசாங்கம் வைத்த நோட்டீசை அகற்றக் கூடிய அதிகாரம் கொண்ட அந்த நபர் யார்? அவருக்கும் திமுக அரசுக்கும் என்ன தொடர்பு? வருவாய்த்துறை அமைச்சர் இது குறித்து விசாரிப்பாரா? இந்த நிலத்தை அரசாங்கம் தனது கட்டுப்பாட்டில் எடுத்து ஆக்கிரமிப்பு கட்டிடத்தை இடித்து தள்ளுமா? " என்று கேள்வி எழுப்பி உள்ளது.












Click it and Unblock the Notifications