சென்னையில் போலீஸ் பூத் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. சிறை செல்ல வேண்டும் என்பதற்காக ரவுடி அட்டூழியம்
சென்னை: சிறைக்குச் செல்ல வேண்டும் என்பதற்காகச் சென்னையில் ரவுடி ஒருவன் போலீஸ் பூத் மற்றும் டாஸ்மாக் கடை முன்பு பெட்ரோல் குண்டுகளை வீசிய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அந்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
நேற்றிரவு (ஜூலை 25) சென்னை அண்ணாநகர் மேற்கு அன்னை சத்யா நகர் பகுதியில் மதுபோதையில் வந்த இளைஞர் ஒருவர் திடீரென பெட்ரோல் குண்டை அங்கிருந்த போலீஸ் பூத் மீது வீசியிருக்கிறார்.

கையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை அந்த ரவுடி வீசிய நிலையில், அது போலீஸ் பூத் அருகே உள்ள சுவரில் பட்டு வெடித்துச் சிதறியது. பின்னர் அங்கிருந்த கொஞ்ச தூரம் நடந்து சென்ற அந்த ரவுடி அருகே இருந்த டாஸ்மாக் கடைக்கு முன்பு மற்றொரு பெட்ரோல் குண்டை வீசியிருக்கிறார். இதனால் கடைக்கு முன்பு அந்த பெட்ரோல் குண்டு வெடித்துச் சிதறியது.
இதனால் அங்கிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர். இருப்பினும், அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை. அங்கிருந்த போலீசார் உடனடியாக குண்டு வீசிய அந்த நபரைப் பிடித்து அண்ணாநகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் பெட்ரோல் குண்டு வீசிய அந்த நபர் அண்ணாநகர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த பாலமுரளி (31) என்பது தெரிய வந்தது. அவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் அவர் மீது ஏற்கெனவே கொலை முயற்சி மற்றும் அடிதடி என பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு தாயுடன் திருச்சிக்குச் சென்ற பாலமுரளி அங்கு வசித்து வந்துள்ளார். அங்கு மதுவுக்கு அடிமையான பாலமுரளிக்கு மனநல பாதிப்பும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வருவதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்தச் சூழலில் தான் நேற்று முன்தினம் பாலமுரளி திருச்சியில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார். சிறைக்குச் செல்ல வேண்டும் என்பதற்காகவே பாலமுரளி இரண்டு பாட்டில்களில் பெட்ரோலை நிரப்பி அதை போலீஸ் பூத் மற்றும் டாஸ்மாக் கடை முன்பு வீசியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இது குறித்து போலீசார் இப்போது அடுத்தகட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications