நாளை ஆஜராகனும்.. மன்சூர் அலிகானுக்கு அடுத்த சிக்கல்! நடிகை த்ரிஷா குறித்த சர்ச்சையால் பறந்த சம்மன்
சென்னை: நடிகை த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சால் நடிகர் மன்சூர் அலிகான் மீது சென்னை காவல்துறை 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்நிலையில் தான் நாளை விசாரணைக்கு ஆஜராக வேண்டி மன்சூர் அலிகானுக்கு சென்னை காவல்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இதனால் அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் லியோ. இந்த படத்தின் கதாநாயகியாக த்ரிஷா நடித்திருந்தார். நீண்ட ஆண்டுகளுக்கு அவர் நடிகர் விஜயுடன் மீண்டும் ஜோடி சேர்ந்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன், இயக்குனர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், நடிகர் மன்சூர் அலிகான், நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் உள்பட நிறையபேர் நடித்து இருந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி திரையரங்கில் நன்றாக ஓடியது.
இந்நிலையில் தான் சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அதாவது "லியோ படத்தில் பெட்ரூம் காட்சி மிஸ் ஆகிவிட்டது. குஷ்பு, ரோஜாவை மெத்தையில் போட்டதுபோல் திரிஷாவை போட முடியவில்லை" என பொருள்படும்படி அவர் கூறியது பெரிய அளவில் விவாதத்தை கிளப்பியது.
இதற்கு நடிகை த்ரிஷா, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்பட பல நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுபற்றி நடிகை த்ரிஷா, "மன்சூர் அலிகான் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் என் கவனத்துக்கு வந்தது. இதில், பாலியல், பெண் வெறுப்பு, மோசமான ரசனையை நான் காண்கிறேன். அவருடன் இனி ஒரு காலமும் படம் நடிக்க மாட்டேன்" என தெரிவித்து இருந்தார்.
இருப்பினும் மன்சூர் அலிகான் தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நான் பேசியதில் எந்த தவறும் இல்லை. இதற்கெல்லாம் மன்னிப்பு கேட்க முடியாது. என் பின்னால் தமிழ்நாடே உள்ளது என தொடர்ந்து கூறி வருகிறார். இதற்கிடையே தான் தேசிய மகளிர் ஆணையம் சார்பில் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல்துறையில் புகாரளிக்கப்பட்டது.
இந்த புகாரை தொடர்ந்து சென்னை ஆயிரம் விளக்கு போலீசார் நடிகர் மன்சூர் அலிகான் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 354 ஏ, 509 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் தான் நடிகர் மன்சூர் அலிகானுக்கு சம்மன் அனுப்ப சென்னை காவல்துறையினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி நடிகர் மன்சூர் அலிகானுக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாளை நேரில் வந்து விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு காவல்துறை சார்பில் சம்மன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சம்மனை போலீசார் மன்சூர் அலிகான் வீட்டுக்கு சென்ற நிலையில் அவர் இல்லை. இதனால் சம்மன் அவரது மனைவியிடம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதன்மூலம் மன்சூர் அலிகான் நாளை காவல்துறை முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. இருப்பினும் நாளை அவர் ஆஜராவாரா? இல்லை காலஅவகாசம் கேட்பாரா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதேவேளையில் இந்த சம்மனுக்கு மன்சூர் அலிகான் நடந்து கொள்ளும் விதத்தை பொறுத்து தான் போலீசாரும் அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுப்பார்கள் என்பதால் மன்சூர் அலிகானுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications