அண்ணனுக்கு 2 ஊத்தாப்பம் பார்சல்.. சிக்கிட்டாரே.. சென்னை போலீசிடம் இருந்தே வீட்டுக்கே பறந்த ஃபைன்
சென்னை: சென்னை எழும்பூர் வடக்கு ரயில் நிலையம் எதிரே செல்போனில் பேசியபடி சென்றவர் செல்போனில் சிக்கியதால், அவருக்கு இரண்டு அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் போடாத விதிமீறலுக்காக ஆயிரம் ரூபாய் அபராதமும், செல்போனில் பேசியபடி சென்றதற்காக ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
முன்பெல்லாம் ஹெல்மெட் போடாமல் பல இடங்களில் சாதாரணமாக வண்டி ஓட்டுவார்கள். போலீஸ் இல்லை என்றால் யார் பிடிக்க போகிறார்கள் என்று பெரும்பாலும் ஹெல்மெட் போடுவதும் இல்லை. போக்குவரத்து போலீசார் சோதனை செய்யும் பகுதிகளில் மட்டும் தான் ஹெல்மெட்டுடன் சுற்றுவார்கள். மற்ற நேரங்களில கழட்டி பைக்கின் முன் பக்கத்தில் வைத்துக் கொள்வார்கள். இதுதான் சென்னையில் முன்பு கள எதார்த்தம்.

செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவார்கள். கார்களில் மறந்தும் சீட் பெல்ட் போட மாட்டார்கள்.அரை கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய சிக்னல் இருந்தால், கொஞ்சம் கூட யோசிக்காமல் ஒருவழி பாதையில் சென்று அசால்ட்டாக அபாயகரமாக சாலையை கடந்து போகவேண்டிய இடத்துக்கு போவார்கள். சிக்னலில் போலீஸ் இல்லை என்றால் சுத்தமாக மதிக்காமல் அப்படியே ஏறி செல்வார்கள். இப்படித்தான் சென்னையில் நீண்ட காலமாக இருந்தது.
ஆனால் சென்னை போக்குவரத்து போலீசார் கடந்த 4 மாதங்களாக எடுத்த அதிரடி ஆக்சனால் மக்கள் போக்குவரத்து விதிகளை மீறுவதற்கு பயப்படும் நிலை வந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக ஆபத்தான டிரைவிங், சிக்னலை மதிக்காமல் சென்றது, சிக்னலில் கோட்டை தாண்டி நின்றவர்கள், படிக்கவே முடியாத அளவிற்கு நம்பர் பிளேட் வைத்துள்ளவர்கள், ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள், செல்போனில் பேசிய படி சென்றவர்கள் என சென்னையில் பலருக்கும் அபராதம் கட்ட சொல்லி நோட்டீஸ் அனுப்பி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இது தினசரி நடப்பது, இதுதவிர சென்னையை பொறுத்தவரை வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞயிறுகளில் குடித்துவிட்டு சர்வ சாதாரணமாக வண்டி ஓட்டுவார்கள். வாகனங்களில் வந்து தான் மது வாங்குவார்கள், அங்கேயே ருந்துவிட்டு வண்டியை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு மது போதையில் ஆபத்தான முறையில் செல்வார்கள்.
ஆனால் என்ன ஒரு சிக்கல் என்றால் சனி மற்றும் ஞாயிறுகளில் தான் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்துவார்கள். எனவே ஒருவேளை போலீசிடம் மாட்டினால் அன்றே அவர்கள் வண்டிக்கு 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இது சென்னையில் சர்வ சாதாரணமாக தற்போது வார இறுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னையில் திருவெற்றியூர் ஆரம்பித்து திருவான்மியூர் வந்து பாருங்கள். அல்லது ஈசிஆர் உள்ள கோவளம் ஆரம்பித்து, கோயம்பேடு வரை போய் பாருங்கள். எத்தனை இடத்தில் எத்தனை சிக்குகிறார்கள் என்பதை கண்முன்னால் பார்க்க முடியும்.
போக்குவரத்து போலீசாரின் சோதனையில் மட்டுமல்ல.. பொதுமக்களின் சோதனையில் அபராதம் விதிக்கப்படுவது தற்போது அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் தாங்கள் பார்க்கும் இடத்தில் போக்குவரத்து விதிமீறலில் யாரேனும் ஈடுபட்டிருப்பதை பார்த்தால் உடனே போட்டோ எடுத்து அல்லது வீடியோ எடுத்து சென்னை மாநகராட்சி போக்குவரத்து போலீசாரை ட்விட்டரில் டேக் செய்யலாம். அப்படி செய்தால் யாராக இருந்தாலும் உடனே நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இதை பார்த்த பலரும் சென்னை மாநகர போக்குவரத்து போலீசாரை டேக் செய்து போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து புகார் அளித்து வருகிறார்கள். அப்படி அளித்த பலருக்கும் சென்னை மாநகர போலீசார் பதில் அளித்து நடவடிக்கை எடுக்கிறார்கள். போலீஸ் தொடங்கி அரசியல்வாதிகள் வரை பலரும் சிக்கி உள்ளார்கள்.
நம்பர் பிளேட் தெரியும் வகையில் வாகனத்தின் புகைப்படம், புகைப்படம் எடுக்கப்பட்ட இடம் நேரத்தை சொன்னால் போதும், சிசிடிவியை ஆராய்ந்து உடனே சென்னை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். தினமும் ஏராளமானோருக்கு இப்படி போக்குவரத்து விதிமீறலுக்காக போலீசார் அபராதம் விதித்து வருகிறது.
இந்நிலையில் சென்னை போக்குவரத்து போலீசாரை டேக் செய்து தினமும் 50க்கும் மேற்பட்டவர்கள் புகார்கள் அளித்து வருகிறார்கள். அப்படி அளிக்கும்புகார்களில் நேரம், இடம் குறித்து தகவல்கள் இருப்பதில்லை. இதையடுத்து சென்னை பெருநகர காவல் ட்விட்டர் பக்கத்தில் முதல்முறையாக பதிவிடுவோர் இடம் மற்றும் நேரம் குறித்து தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் அறிவித்தனர். அப்படி அறிவித்த பின்னர் ஏராளாமானோர் கொத்தாக மாட்டிக்கொள்கிறார்கள்.
அப்படித்தான் சென்னை எழும்பூர் வடக்கு ரயில் நிலையம் எதிரில் உள்ள சிக்னலில் ஒருவர் செல்போனில் பேசியபடி போயிருக்கிறார். உடனே அவரை புகைப்படம் எடுத்து கடந்த 18ம் தேதி இப்படி ஒருவர் போயிருக்கிறார். நடவடிக்கை எடுப்பீர்களா என்று நெட்டிசன் ஒருவர் சென்னை போலீஸை டேக் செய்து கேட்டார். உடனே அண்ணனுக்கு இரண்டு ஊத்தாப்பம் பார்சல் என்ற பாணியில் போலீசாரும் ஹெல்மெட் போடாததற்கு ஒரு ஆயிரம் ரூபாயும், செல்போனில் பேசிய படி சென்றதற்காக ஒரு ஆயிரம் ரூபாயும் என இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications