ரவுடி நாகேந்திரன் இளைய மகனும் பாஜக நிர்வாகியுமான அஜித் ராஜை தீவிரமாக தேடும் போலீசார்! என்ன பின்னணி?
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக (A1) சேர்க்கப்பட்டு சிறையில் உள்ள ரவுடி நாகேந்திரனின் இளைய மகனும், பாஜக இளைஞர் அணி நிர்வாகியுமான அஜித்ராஜ் மீது வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை பெரம்பூரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் ஒரு கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில், வேலூர் சிறையில் வேறொரு குற்ற வழக்கில் அடைக்கப்பட்டு இருந்த ரவுடி நாகேந்திரன் முதல் குற்றவாளியாகவும், அவரது மகன் அஸ்வத்தாமன் மூன்றாவது குற்றவாளியாகவும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மொத்தமாக 28 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து ரவுடி நாகேந்திரனின் கூட்டாளிகளை ரவுடிகள் ஒழிப்பு நுண்ணறிவு போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், ரவுடி நாகேந்திரனின் சகோதரர்கள் மற்றும் அவரது கூட்டாளிகள் இணைந்து வேறொரு நபரை கொலை செய்ய திட்டம் தீட்டி வந்ததாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கடந்த 7 ஆம் தேதி ரவுடி நாகேந்திரனின் சகோதரர்கள் வீடு மற்றும் அவரது கூட்டாளிகள் வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் போலீசார் 51 பட்டா கத்திகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்து 7 பேரை கைது செய்தனர். அவர்களில் பலர் நாகேந்திரனுக்கு நெருக்கமான உறவினர்கள். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மேலும் சிலர் வீட்டில் ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாக அவர்கள் தெரிவித்ததை அடுத்து, வியாசர்பாடியில் உள்ள அஸ்வத்தாமன் புது வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர். அங்கும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில், நாகேந்திரன் உறவினர் வீடுகளில் இருந்து 51 பட்டாக் கத்திகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் ரௌடி நாகேந்திரனின் இளைய மகனும், பாஜக இளைஞர் அணி நிர்வாகியுமான அஜித்ராஜ் மீது வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுபற்றி அறிந்த அஜித்ராஜ் தற்போது தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது.
தலைமறைவான அஜித் ராஜை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். அஜித் ராஜை கைது செய்து, அவரிடம் ஆம்ஸ்ட்ராங் கொலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு, அவரை தேடி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஒரு ஆண்டாக ரவுடி நாகேந்திரன் சிறையில் இருந்தபோது எத்தனை நபர்களை சந்தித்தார், அவர் யாரிடம் எல்லாம் உரையாடினார், அவர் மருத்துவமனைக்கு செல்லும்போது யாரை சந்தித்தார் என அவருடன் இருக்கும் காவலர் வைத்திருக்கும் சிறப்பு ரெக்கார்டிங் டிவைஸ் மூலம் ஆய்வு செய்துள்ளனர்.
இதற்கிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி நாகேந்திரனின் தங்கை கற்பகம் மற்றும் அவரது கணவர் சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கந்துவட்டி மற்றும் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் போலீஸ்சார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications